மோசடிகளில் ஈடுபட்டு 94 பேரை ஏமாற்றி $170,000க்கும் அதிகமான தொகையைப் பறித்தவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று விதிக்கப்பட்டன.
மிரட்டிப் பணம் பறித்ததாகவும் மோசடியில் ஈடுபட்டதாகவும் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 24 வயது முகம்மது ஹிஷாம் ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பளிக்கப்பட்டபோது மேலும் ஒன்பது குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
ஏமாற்றிப் பறித்த பணத்தை முகம்மது ஹிஷாம் திருப்பித் தரவில்லை.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகும் அவர் குற்றம் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பிளேஸ்டேஷன் 5 சாதனத்தை குறைவான விலையில் விற்பதாக 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கெரோசல் தளத்தில் அவர் விளம்பரம் செய்திருந்தார்.
அதை வாங்க முன்வந்தவரிடம் அவர் முன்பணம் கேட்டார்.
சிலர் முழுத் தொகையையும் செலுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
முதலில் அவரால் சில வாடிக்கையாளர்களுக்கு பிளேஸ்டேஷன் 5 சாதனங்களை அனுப்பிவைக்க முடிந்தது.
ஆனால் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அவரால் அதைச் செய்ய முடியவில்லை.
வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தை அவர் சூதாட்டத்துக்குப் பயன்படுத்தியதே இதற்குக் காரணமாக அமைந்தது.
வாடிக்கையாளர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக்கழித்தார்.
விற்பனை செய்ய ஃபிளேஸ்டேஷன் 5 சாதனங்களை வாங்கும் நோக்கம் இல்லாதபோதிலும் அவர் தொடர்ந்து மற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட பலர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதியன்று முகம்மது ஹிஷாம் கைது செய்யப்பட்டார்.
2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அப்போது ‘எரிக்கா லீ’ என்ற பெயரில் டெலிகிராம் செயலி மூலம் அவர் மோசடியில் ஈடுபட்டார்.
வாகன ஓட்டுநர் உரிமத்தை விற்பதாக அவர் விளம்பரம் செய்தார்.
வாகன ஓட்டுநர் உரிமத்தை வாங்க பலர் அவருடன் தொடர்புகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவை உண்மையான உரிமங்களா அல்லது போலி உரிமங்களா என்ற விவரம் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், 2022ஆம் தேதி மே மாதம் வாகன ஓட்டுநர் உரிமத்தை வாங்க ஆடவர் ஒருவர் $400 செலுத்தினார். தமது அடையாள அட்டையைக் காட்டும் படத்தையும் அவர் அனுப்பிவைத்தார்.
பிறகு மனதை மாற்றிக்கொண்ட அந்த ஆடவர் தமது பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுக்கொண்டார்.
பணத்தை உடனடியாகத் தர முடியாது என்று தெரிவித்த முகம்மது ஹிஷாம், பரிவர்த்தனையை ரத்து செய்து பணத்தைத் திரும்ப பெற பல்வேறு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அந்த ஆடவரை ஏமாற்றி $38,000க்கும் அதிகமான தொகையை முகம்மது ஹிஷாம் பறித்தார்.
கட்டணம் செலுத்துவதை நிறுத்தினால், அவரைத் தேடி அவரது வீட்டிற்கு ஆட்கள் வருவர் என்று அந்த ஆடவரை முகம்மது ஹிஷாம் மிரட்டினார்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவரிடம் பணம் கேட்டு முகம்மது ஹிஷாம் பல கடிதங்களை அனுப்பினார்.
இதையடுத்து, அந்த ஆடவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதியன்று முகம்மது ஹிஷாம் மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.