18ஆம் நூற்றாண்டு ஜாடியைத் திருடியவருக்குச் சிறை

1 mins read
f38db321-6691-48a5-803e-36882fa16448
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 42 வயது குவோக் சியோ ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பழங்காலத்து ஜாடியைத் திருடிய குற்றத்துக்காக ஆடவர் ஒருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பழங்காலத்துக்குப் பொருள்களை விற்பவரான 42 வயது குவோக் சியோவுக்கு திங்கட்கிழமை (மார்ச் 2) 29 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தமது வாடிக்கையாளருக்குச் சொந்தமான 18ஆம் நூற்றாண்டு ஜாடியை அவருக்குத் தெரியாமல் குவோக் விற்பனை செய்தார். அந்த ஜாடியின் மதிப்பு $300,000. ஜாடியை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு குவோக் தமது கடன்களை அடைத்தார். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு இது தெரியாமல் இருக்க அந்தப் பழங்காலத்து ஜாடிக்குப் பதிலாக போலி ஜாடி ஒன்றுக்கு குவோக் ஏற்பாடு செய்தார். உண்மையான ஜாடிக்குப் பதிலாக அந்தப் போலி ஜாடியை வாடிக்கையாளரிடம் கொடுத்தார்.

அதே வாடிக்கையாளருக்குச் சொந்தமான சீனப் பாரம்பரிய எழுத்தோவியத்தைச் சுத்தம் செய்யும்போது அதை குவோக் சேதப்படுத்தினார். அந்த எழுத்தோவியத்துக்குப் பதிலாக அச்சிடப்பட்ட நகல் ஒன்றை வாடிக்கையாளரிடம் கொடுத்தார். தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை குவோக் ஒப்புக்கொண்டார். நம்பிக்கை துரோகக் குற்றம் புரிபவர்களுக்கு ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்