நிலையில்லாத பொருளியல் சூழலிலும் நிலைத்து நிற்கும் வளர்ச்சியே இலக்கு: பிரதமர்

நிலையில்லாத பொருளியல் சூழலிலும் நிலைத்து நிற்கும் வளர்ச்சியே இலக்கு: பிரதமர்

2 mins read
17e8d52e-e14f-408c-bebc-4cb90558e4cf
பொருளியல் சந்தைகள் சவால் மிகுந்ததாக இருந்தாலும், 2026ஆம் ஆண்டில் மிதமான வளர்ச்சியைக் காண இயலும் என்று நம்பிக்கை தெரிவித்தார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தி பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அதன் 60வது சுதந்திரத் தினத்தைத் தொடர்ந்து தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடுத்த அத்தியாயத்திற்குள் கால்பதிக்கும் வேளையில், 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை வியாழக்கிழமை (பிப்ரவரி 12) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்.

கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்றப் பிறகு, திரு வோங் தாக்கல் செய்யும் முதல் வரவு செலவுத் திட்டம் இது.

நாட்டை வளர்ச்சியின் பாதையில் இட்டுச்செல்லும் இந்தக் கட்டம், இம்முறை பேரளவிலான உலக மாற்றங்களுக்கிடையே நடைபெறுவதாகச் சுட்டிய பிரதமர் வோங், இதற்கேற்ப சிங்கப்பூரின் பொருளியல் உத்தியும் புதுப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

‘‘ஏறத்தாழ எண்பது ஆண்டுகளாக நிலைத்தன்மை, பொருளியல் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஆதரவுகளால் உலகம் பலனடைந்தது.

‘‘இந்த அமைப்பு பெரும்பாலும் அமெரிக்கத் தலைமைத்துவத்தைச் சார்ந்து இருந்தது. அதன்வழி கிடைத்த முன்னேற்றங்கள் ஆசியா உள்பட உலகமெங்கும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. எனினும், அந்தக் காலம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது,’’ என்றார் திரு வோங்.

அதிகரித்து வரும் புவிசார் பதற்றங்கள், நிலையில்லா சூழலுக்கு மத்தியிலும் உலகப் பொருளியல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாகச் செயலாற்றியதாக கூறிய பிரதமர், இந்த ஆண்டு அவ்வளவு சாதகமாக இருக்காது என்றும் சொன்னார்.

‘‘உலகப் பொருளியல் வலுவற்று இருப்பதைக் குறிக்கும் தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன.

‘‘பெரும் பொருளியல்களைக் கொண்டிருக்கும் பல நாடுகளின் கடன் சுமைகள் அதிகரித்து வருவதும் நிதிநிலையின் நிலைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

‘‘இவை நம்மீது நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். என்றபோதும், கடந்த ஆண்டு உலகப் பொருளியலில் தென்பட்ட மீள்திறன், நம் பொருளியல் வலிமையுடன் இணைந்து எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் ஐந்து விழுக்காடு வளர்ச்சியைக் கண்டது,’’ என்று விவரித்தார் பிரதமர்.

மிதமான வளர்ச்சியை எதிர்நோக்கி 2026 பொருளியல் பயணம்

பொருளியல் சந்தைகளில் நிலவிய சவால்கள், எதிர்மறை போக்குகள் ஆகியவை பிரதமரின் பேச்சில் முக்கிய இடம் வகித்தாலும், 2026ஆம் ஆண்டில் மிதமான வளர்ச்சியைக் காண இயலும் என்று நம்பிக்கை தெரிவித்தார் நிதி அமைச்சருமான வோங்.

‘‘கடந்த ஆண்டு அனைத்துலக அளவில் காணப்பட்ட ஆக்ககரமான தாக்கங்களில் சில இந்த ஆண்டும் தொடரும்.

‘‘2026ஆம் ஆண்டில் அதிகளவிலான மிதமான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். அவ்வகையில், ஒரு விழுக்காடு முதல் இரண்டு விழுக்காடு வரையிலான பணவீக்கத்துடன், இரண்டு விழுக்காடு முதல் நான்கு விழுக்காடு வரையிலான வளர்ச்சி முன்னுரைக்கப்படுகிறது,’’ என்று உரையின்போது குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்