பாலர் பள்ளிக் கட்டண உதவித் திட்டத்துக்குத் தகுதிபெறும் வருமான வரம்பு அதிகரிப்பு

பாலர் பருவக் கல்வித் துறை மேம்பாடுகள் குறித்த அமைச்சின் அறிவிப்புகள்

பாலர் பள்ளிக் கட்டண உதவித் திட்டத்துக்குத் தகுதிபெறும் வருமான வரம்பு அதிகரிப்பு

2 mins read
4869bed0-d862-4c2b-b1da-fa57087f4076
பிள்ளைகள், சக பிள்ளைகளுடன் இணைந்து விளையாடி, கற்று, வளர்வதுடன் முழுமையான வளர்ச்சியைப் பெறும் தளமாகத் தரமான பாலர் பள்ளிகள் அமைவதாகச் சொன்ன திரு கோ பெய் மிங், அவை குறித்த திட்டங்களையும் விளக்கினார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த ஆண்டு (2027) ஜனவரி முதல் சிசு, பிள்ளைப் பராமரிப்புக்கான கூடுதல் மானிய நிதி, பாலர் பள்ளிக் கட்டண உதவித் திட்டம் (KiFAS) ஆகியவற்றுக்குத் தகுதி பெறும் குடும்பங்களுக்கான மாதாந்தர மொத்த வருமான வரம்பு 15,000 வெள்ளியாக உயர்த்தப்படும்.

இந்த மேம்பாடு, 60,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பலனளிக்கும் என்றார் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் கோ பெய் மிங்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (மார்‌ச் 6) நடைபெற்ற அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய அவர், பாலர்பருவக் கல்வியில் செய்யப்படவுள்ள மேம்பாடுகள் குறித்து விளக்கினார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் பாலர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின்கீழ் செயல்படும் பாலர் பள்ளி நிறுவனங்கள் (AOPs), பங்காளித்துவ அமைப்புகளின் பாலர் பள்ளிகள் ஆகியவற்றில் முழுநாள் பிள்ளைப் பராமரிப்புக் கட்டணம் 15 விழுக்காடு வரை குறைந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த பத்தாண்டுகளில் பாலர் பள்ளிகள் 135,000லிருந்து 220,000 ஆக அதிகரித்ததைச் சுட்டிய அவர், 2029ஆம் ஆண்டுக்குள் பாலர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளிகளில் முழுநாள் பராமரிப்புக்காக கூடுதலாக 40,000 இடங்கள் சேர்க்கப்படும் என்று சொன்னார்.

மாணவர் பராமரிப்புக் கட்டண உதவித் திட்டம் 2027 ஜனவரி மாதம் மேம்பாடு காணும் என்று வரவுசெலவுத் திட்ட உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்திருந்த நிலையில், இதற்கான தகுதிபெறும் மாதாந்தரக் குடும்ப வருமானம் 4,500 வெள்ளியிலிருந்து 6,500 வெள்ளியாக அதிகரிக்கப்படும் என்றார் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துறைத் துணையமைச்சர் ஸூல்கர்னைன் அப்துல் ரஹிம். இதன் மூலம் 13,000 மாணவர்களும் குடும்பத்தினரும் பயனடைவர் என்று அவர் கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொழில்துறை மின்னிலக்கத் திட்டங்கள் புதுப்பிக்கப்படும் என்று துணை அமைச்சர் கோ பெய் மிங் தெரிவித்தார்.

புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின்கீழ் பள்ளி நடத்துநர்கள் அடிப்படைத் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். மேலும் இது கூடுதலான மின்னிலக்கத் தீர்வுகளை ஏற்க வழிவகுப்பதுடன், அதற்கான நிதி ஆதரவை மேம்படுத்தும். முன்னோடித் திட்டங்களுக்கான தொடக்க நிதித் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். புதுப்பிக்கப்பட்ட 2.0 திட்டம் இவ்வாண்டின் பிற்பாதியில் அறிமுகம் காணும். முதலில் 2027 ஜூன் மாதம் பெரிய நடத்துநர்களிடம் தொடங்கி படிப்படியாக அது விரிவடையும்.

மேலும், தரமான கல்வியாளர்களை ஈர்ப்பதும் தக்கவைத்துக்கொள்வதும் அமைச்சின் முன்னுரிமையாக உள்ளதைச் சுட்டிய கோ பெய் மிங், இத்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக 2030ஆம் ஆண்டுக்குள் ஆரம்பகாலக் கல்வியாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக 3,500 வரை உயர்த்தப்படும் என்றார்.

குறிப்புச் சொற்கள்
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுபாலர் பள்ளிமேம்பாடுவருமானம்உதவித் திட்டம்