இவ்வாண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று செம்பவாங் டிரைவில் சோதனைக்காக வாகனத்தை நிறுத்தச் சொன்னபோது, அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தி, போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் ஓட்டித் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் 25 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அந்த ஆடவர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காகவும் வாகனம் ஓட்ட தகுதியிழப்பு செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டியதற்காகவும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பதிவு ரத்து செய்யப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தியது மற்றும் வாகனக் காப்புறுதி இல்லாமல் வாகனத்தை ஓட்டியது தொடர்பான விசாரணைகளுக்கும் அவர் உதவி வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பதிவு ரத்து செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டியது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் 19 முதல் 32 வயதுக்குட்பட்ட ஒன்பது ஆடவர்களில் அவரும் ஒருவர் என்று காவல்துறை கூறியது.
ஜனவரி 30ஆம் தேதிமுதல் பிப்ரவரி 12ஆம் தேதிவரை பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக அந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

