போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதனைக் கைவிட ஊக்குவிக்கும் வகையில், மே 16 முதல், தாங்களாகவே முன்வந்து சரணடையும் முதன்முறை போதைப்புழங்கிகள் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்படமாட்டார்கள்.
மாறாக, அவர்கள் கட்டாய வழக்கு மேலாண்மை மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.
சட்ட அமைச்சர் எட்வின் டோங், வெள்ளிக்கிழமை (மே 15) சன்டெக் நிலையத்தில் நடைபெற்ற ‘போதைப்புழக்கத்தால் பாதிக்கப்பட்டோர் நினைவுநாள் அனுசரிப்பு விழாவில்’ அதை அறிவித்தார்.
மேலும், தற்போதைய சரணடையும் நடைமுறையின் விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங், “இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு, போதைப்பொருள் அற்ற வாழ்க்கையை வாழ விரும்புவோருக்கு வழக்கமான ஆலோசனை அமர்வுகள் மூலம் ஆதரவளிக்கப்படும்,” என்று சொன்னார்.
“இந்த அமர்வுகளில், குடும்பத்தினருடனான ஈடுபாடு போன்ற உளவியல் அடிப்படையிலான முறைகளும் பயன்படுத்தப்படும். மேலும், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மூலம் வழக்கமான முடி அல்லது சிறுநீர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்,’’ என்று விவரித்தார் திரு டோங்.
சிங்கப்பூரின் போதைப்புழக்கச் சூழல் நிலையாக இருப்பதாகக் குறிப்பிட்டார் திரு டோங். ஆனாலும், சில போக்குகள் கவலையளிப்பதாக அவர் கூறினார்.
‘‘அண்மைய ஆண்டுகளில் இளம் மற்றும் புதிய போதைப்புழங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் கைதுசெய்யப்பட்ட புதிய போதைப்புழங்கிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதிற்குக் குறைவானவர்கள்,’’ என்றார் திரு டோங்.
சென்ற 2024ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 20 வயதுக்குக் கீழ் உள்ள புதிய போதைப்புழங்கிகளின் எண்ணிக்கை 22 விழுக்காடு அதிகரித்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், சமூகப் பங்காளிகள் எனப் பலர் அனுசரிப்பு விழாவில் கூடியிருந்தனர்.
அப்போது, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெளியிட்ட அண்மையப் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு போதைப்பொருள் புழக்கத்திற்காகக் கைது செய்யப்பட்ட ஆக இளைய நபர் 12 வயது சிறார் என்பதைத் திரு டோங் குறிப்பிட்டார்.
அதோடு, சிங்கப்பூரில், கஞ்சா கவலைக்குரிய விஷயமாகவே நீடிக்கிறது என்றார் அவர்.
2025ஆம் ஆண்டில் அதன் தொடர்பில் கைது செய்யப்பட்டோரில் பத்தில் ஏழு பேர் புதிதாகப் அப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று அவர் தெரிவித்தார். அவர்களில், 63 விழுக்காட்டினர் 30 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் அவர் சொன்னார்.
“கஞ்சா தீங்கு விளைவிக்காது; அது ஒரு வாழ்க்கைமுறைத் தேர்வு; அது ஒரு பெரிய விஷயமல்ல என்று இந்தத் தலைமுறை இளையர்களுக்கு இணையம் வாயிலாகச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் அப்பட்டமான பொய்கள்,’’ என்று கூறிய அமைச்சர் டோங், போதைப்புழக்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு தனிநாடால் மட்டுமே வெல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

