தெருக்களில் அல்லது பொதுவெளியில் தூங்கும் வீடற்றோர்க்கு நிரந்தரத் தங்குமிடம், வேலைவாய்ப்பு, குடும்ப உறவுகளை மீண்டும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 17 புதிய சமூகத் திட்டங்கள் தொடக்கம் காண்கின்றன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, கடந்த ஜனவரி மாதம் அறிவித்த $450,000 மதிப்பிலான ‘வீடற்ற நிலையைக் களைவதற்கான பங்காளித்துவ நிதி’ மூலம் இந்தத் திட்டங்கள் செயலாக்கம் காணவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் உறங்கும் வீடற்றோரின் வாழ்வில் ஒளியேற்றும் (பீயர்ஸ்) பங்காளித்துவ அமைப்புகளைப் பாராட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை (19 ஆகஸ்ட்) நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்த முன்னோடித் திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியானது.
பொதுவெளியில் தூங்கும் வீடற்றோரின் தேவைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே உதவிக்கரம் நீட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டங்கள் குறித்துப் பேசிய கல்வி அமைச்சரும் சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ, சமூகமாக இணைந்து வழங்கும் இத்திட்டம் உறைவிடமின்றி வாழ்வோருக்கு நன்னம்பிக்கையையும் கண்ணியமான வாழ்க்கையையும் மீட்டெடுத்துத் தரும் என்றார்.
மறுமலர்ச்சி காணும் மறுவாழ்வு உதவிகள்
முன்னோடித் திட்ட அறிவிப்புகளின்படி பொதுவெளியில் தூங்கும் வீடற்றோர் உணவருந்துவது உட்பட, மனநல ஆலோசனைகளைப் பெறவும் ஆதரவு நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாடகை வீடுகளுக்கு விண்ணப்பிக்கும் ஒற்றையரான வீடற்றோர்க்கு, பொருத்தமான இணைக் குடித்தனக்காரர்களைத் தேர்ந்தெடுத்துத் தருவதன் மூலம் விரைவாக வீடு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
பொதுவெளியில் தூங்கும் வீடற்றோர்க்கு நிலையான உறைவிடம் எனும் உதவியைத் தாண்டி, வேலைவாய்ப்புகள், தொழில் பழகுநர் பயிற்சிகள், வேலைக்கான திறன் பயிற்சிகளும் கிடைக்கவுள்ளன.
குறிப்பாக வீடற்ற இளையர்க்கு ஆலோசனை, தொழிற்கல்வி வழிகாட்டுதல் உட்பட வழிகாட்டிகள் வாயிலாக உதவிகளும் வழங்கப்படவுள்ளது.
மாணவர்களுக்கும் ஆதரவுக்கரம் கிடைக்கவுள்ள இத்திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் லீ, தொழில்நுட்பக் கல்விக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றில் பயிலும் வீடற்ற மாணவர்களுக்குத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தரவும் கல்வி நிறுவனங்கள் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளவிருக்கின்றன என்றார்.
“சிங்கப்பூரில் யாரும் பொதுவெளிகளில் உறங்கக் கூடாது என்ற நோக்கத்துடன் அரசாங்கமும் சமூகப் பங்காளித்துவ அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன. தற்காலிகத் தங்குமிடம் தருவதுடன் நின்றுவிடாமல், அவர்களின் வாழ்க்கையில் மீண்டும் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதே முக்கிய இலக்கு,” என்று திரு லீ குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘PEERS’ கட்டமைப்பு, 24 பங்காளிகள் என்ற நிலையிலிருந்து வலுவடைந்து தற்போது 80க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், குழுக்களை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது.
நிகழ்ச்சியின்போது இச்சேவையில் 5 ஆண்டுகளைக் கடந்தும் பங்காற்றி வரும் 12 அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டதோடு, 11 புதிய அமைப்புகளும் அதிகாரபூர்வமாக இக்கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டன.
சிங்கப்பூரில் பொதுவெளிகளில் உறங்கும் வீடற்றோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்றுக் குறைந்துள்ளதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. அத்தகையோர் குறித்த இரண்டாவது கணக்கெடுப்பை அமைச்சு கடந்த 2025 ஜூலை 18ஆம் தேதி நடத்தியது. அந்த ஒற்றை இரவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மொத்தம் 496 சாலையோரவாசிகள் இருப்பதாகப் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 530 சாலையோரவாசிகள் பதிவாகியிருந்தனர். அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது இந்த எண்ணிக்கை 6.4 விழுக்காடு வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


