கூட்டுரிமை வீடுகளின் (காண்டோமினியம்) நிர்வாகம் முன்னெடுக்கும் அதன் உட்பிரிவுச் சட்டங்கள் வீட்டு உரிமையாளர்களைக் கட்டுப்படுத்தாது என்று கட்டட, கட்டுமான ஆணையம் (பிசிஏ) வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தெரிவித்தது.
ஒரு கூட்டுரிமைச் சொத்தில் உள்ள பொதுவான இடங்களுக்கு அதன் நிர்வாகத்தின் சட்டங்கள் பொருந்தும் எனவும் அதன்படி, உரிமையாளர்கள் அவர்களது வீடுகளை வாடகைக்கு விடுவதை நிர்வாகம் தடுக்க முடியாது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியது.
உட்பிரிவுச் சட்டங்கள் குறித்த கருத்துவேறுபாடுகளுக்கு அதன் நிர்வாகம் கூட்டுரிமைப் பட்டாக் கழகத்தை நாடலாம் எனவும் ஆணையம் அறிவுரை வழங்கியது.
கேலாங்கில் உள்ள ‘காஸா ஏராட்டா’ கூட்டுரிமை கட்டடத்தில் உள்ள சில வீட்டு உரிமையாளர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு வீட்டை வாடகைக்கு விட்டதை எதிர்த்து அதன் நிர்வாகம் அண்மையில் இரு சட்டங்களை நிறைவேற்றியது.
கட்டுமானத் துறையில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் நிறுவனங்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்ட உரிமையாளர்களுக்கு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வழக்கறிஞர்களிடம் இருந்து சட்டத்தை மீறியதாகக் கடிதங்கள் கொடுக்கப்பட்டன.
கூட்டுரிமை பட்டாக் கழக நிர்வாகச் சட்டத்தை மேற்கோள்காட்டி காஸா ஏராட்டா வீடுகளின் நிர்வாகம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டம் ஒன்றை அமலாக்கியது. அதன்படி, வேலை அனுமதி அட்டை (வொர்க் பர்மிட்) பெற்றுள்ள ஊழியர்களுக்கு வீடுகள் வாடகைக்கு வழங்கமுடியாது என்ற விதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அச்சட்டப்படி மூன்று மாதங்களுக்கும் குறைவாக யாருக்கும் வீடுகளில் வாடகைக்கு இருக்க அனுமதி இல்லை.
கட்டட கட்டுமான ஆணையத்தின் நிலை
அதே கூட்டுரிமை பட்டாக் கழக நிர்வாக சட்டங்களின்படி, கூட்டுரிமை வீடுகள் உட்பட தனியார் சொத்துகளின் நிர்வாகங்கள் வீட்டு உரிமையாளரின் உரிமைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்று கட்டட கட்டுமான ஆணையம் அதன் ஃபேஸ்புக்கில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளது.
அதன்படி, உரிமையாளர்கள் வீடுகளின் உரிமையை மற்றொருவருக்கு மாற்றுதல், அடமானம் வைத்தல், குத்தகைக்கு விடுதல், ஒரு சொத்தை எவ்வாறு கையாளவேண்டும் என முடிவெடுத்தல் ஆகியனவும் உள்ளடங்கும்.

