உலகளவில் தொடர்ந்துவரும் பதற்றங்கள் மேலும் ஆழமாகிவரும் நிலையிலும் நீண்டகாலமாக செயல்பட்டுவந்த உலக ஒழுங்குமுறை நிலைகுன்றிய சூழலிலும் எதிர்பார்ப்புகளைத் தாண்டி 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 4.8% வளர்ச்சியடைந்துள்ளது.
இருப்பினும், நாம் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இந்த வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வது சவாலான ஒன்று என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை (டிசம்பர் 31) வெளியிட்ட புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து போட்டித்தன்மையுடன் நிலைத்திருக்க நாம் தற்போது நடப்பில் இருப்பதையே மீண்டும் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறிய திரு வோங், “நாம் நமது பொருளியல் உத்திகளை மறுபரிசீலனை செய்து, மாற்றியமைத்துப் புதுப்பிக்க வேண்டும்,” என்றார்.
அதன் தொடர்பில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையில், இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினர் இந்த இன்றியமையாத முன்னெடுப்பை வழிநடத்திவருகின்றனர். அவர்களின் முதல்கட்டப் பரிந்துரைகளின் தொகுப்பு விரைவில் வெளியீடு காணவுள்ளதாகவும் அரசாங்கம் அதன் தொடர்பில் எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் பதிலளிக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். நிதியமைச்சருமான திரு வோங், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வெளியிடுகிறார்.
சிங்கப்பூர் பொருளியலின் வலுவான வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த மின்கடத்தி, மின்னணுப் பொருள்களின் தேவையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணிகளில் ஒன்றாக பிரதமர் குறிப்பிட்டார். அந்தத் தேவைகளின் உயர்வால், வேலையின்மையும் பணவீக்கமும் குறைவாக இருந்ததோடு நிகர வருமானங்கள் அனைத்து நிலைகளிலும் உயர்ந்தன என்று அவர் விளக்கினார்.
புவிசார் அரசியல் குறித்தும் தமது புத்தாண்டுச் செய்தியில் பேசிய பிரதமர், அனைத்துலக அரங்கில் சிங்கப்பூரின் நற்பெயர் நம் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் பல வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாக மெச்சினார்.
“நம் நிறுவனங்கள் புதிய துறைகளில் தங்களை நிலைநிறுத்தி, முத்திரை பதித்து வருகின்றன. நம் நிறுவனங்கள் விரிவடையவும் வளர்ச்சியடையவும் வெளிநாட்டு வாய்ப்புகளைக் கைப்பற்றிக்கொள்ளவும் நாம் தொடர்ந்து அவற்றுக்கு ஆதரவளிப்போம்,” என்று உறுதியளித்தார் திரு வோங்.
புதிய வர்த்தக முயற்சிகளுக்குப் பல உலக நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தளமாகத் தேர்ந்தெடுப்பதைச் சுட்டிக்காட்டிய திரு வோங், மேலும் துடிப்புமிக்கத் தொழில் நிறுவனங்களை ஈர்க்க ஒரு சிறப்பான வாய்ப்பாக இது இருக்கும் என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்தின் முயற்சிகள் இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலேயே நோக்கம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்பைவிட இருள் சூழ்ந்து, ஆபத்து நிறைந்ததாக உணரக்கூடிய உலகில் நாம் வாழும் நிலையில் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நீண்டகாலச் சவால்களை எதிர்கொள்ளும் வழிகளைப் பிரதமர் கோடிட்டுக்காட்டினார். த்புதிய குடிமக்களைத் திறந்த மனப்பான்மையுடன் வரவேற்போம்
மூப்படையும் மக்கள்தொகையும் குறைந்துவரும் பிறப்பு விகிதமும் நம் நாடு எதிர்நோக்கும் சவால்களில் ஒன்று. திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற விரும்பும் இளம் சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வீடு, குழந்தைப் பராமரிப்பு, கல்வி போன்ற அவர்களின் அக்கறைகளைத் தீர்க்கும் வகையில் செயல்படுவோம் என்று திரு வோங் உறுதியளித்தார்.
குடும்பங்களின் செழிப்புக்கும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குமான உகந்த சூழலை உருவாக்கவும் அவர் கடப்பாடு தெரிவித்தார்.
“அப்படியென்றால், நம் வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டு வாழ விரும்பும் சக குடிமக்களைத் திறந்த மனப்பான்மையோடு வரவேற்பதுமாகும்,” என்று கூறினார் பிரதமர் வோங்.
நீண்ட ஆயுட்காலத்திற்கான தயார்நிலை
சுகாதாரப் பராமரிப்பு, வேலை, ஓய்வுக்காலம் ஆகியவற்றில் பரந்த அளவிலான தாக்கங்களை, நீண்டுகொண்டு வரும் ஆயுட்காலம் ஏற்படுத்தும் என்றும் அதற்கான முழுமையான ஆய்வு நடந்து வருவதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.
“வயதுக்கு உகந்த வேலை இடங்களில் மூத்தவர்கள் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்க, மூத்த ஊழியர்களுக்கான முத்தரப்புப் பணிக்குழு, உத்திகளை மறுஆய்வு செய்து வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் கதையின் அடுத்த அத்தியாயம்
2025ஆம் ஆண்டின் நிறைவை சிங்கப்பூர்க் கதை உருவாகிய நினைவூட்டலுடன் நாடுகிறோம் என்று கூறிய பிரதமர், ஒரு நாடாக நாம் பிழைத்தே தீரவேண்டும் என்ற உறுதியை அண்மையில் வெளியீடு கண்ட ‘ஆல்பட்ராஸ் கோப்புக் கண்காட்சி’ மூலம் அறியமுடிகிறது என்றார்.
தடுமாற்றத்திற்குரிய தொடக்கத்திலிருந்து நிலையான, செழிப்பான, ஒற்றுமையான நாடாக நாம் மீண்டு வந்தது அதிசயமே என்றும் அது வெறும் அதிர்ஷ்டத்தால் உருவான அதிசயமல்ல; சிங்கப்பூரர்களின் துணிச்சலினாலும் மனவுறுதியினாலும் மட்டுமே சாத்தியமான அதிசயம் என்று திரு வோங் புகழுரைத்தார்.
“நாம் ஒன்றுசேர்ந்து சவால்களைத் தைரியத்துடனும் தன்னடக்கமிக்க விடாமுயற்சியுடனும் எதிர்கொண்டு, தோல்வியைத் தழுவுவதைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளோம்,” என்றார் திரு வோங்.
சிங்கப்பூர் என்ற அதிசயத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு இன்று நாம் அனைவரும் இதே மனத்திடத்துடன் செயல்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
வரலாற்றில் முதன்முறையாக ஆசியக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற காற்பந்துச் சிங்கங்களையும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் செயல்திறனை வெளிப்படுத்திய சிங்கப்பூர் அணி விளையாட்டு வீரர்களையும் சுட்டிக்காட்டிய திரு வோங், அவர்களின் மனத்திடத்தை வரவேற்றார்.
சிங்கப்பூர் கதையின் அடுத்த அத்தியாயத்தை ஒன்றிணைந்து எழுதும் இந்நேரத்தில், மீள்திறன், ஒற்றுமை, தீர்மானம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலான இந்த மனப்பான்மையை நாம் இப்புத்தாண்டிலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

