உலக வர்த்தகம் சுருங்கும், சிங்கப்பூரின் வளர்ச்சி மெதுவடையும் என்ற கணிப்புகளுக்கு இடையே, நம் வர்த்தகங்களையும் ஊழியர்களையும் பாதுகாப்பதற்கு மூன்று அம்சங்களை வலுப்படுத்தவேண்டும் என்று ஓய்வுபெறும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.
அவை நம் நிதிக் கையிருப்புகள், சிங்கப்பூர் ஆயுதப்படை மற்றும் உள்துறைக் குழுவின் கையிருப்புகள், சமூகக் கையிருப்புகளான ஒற்றுமையும் சமுதாய மீள்தன்மையுமே என்று அவர் விளக்கினார்.
“சவால்மிக்க நேரங்களில் நம் ஒற்றுமை குலைந்துவிடக் கூடாது,” என்றார் அவர்.
ஜூரோங் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்ற மக்கள் செயல் கட்சி (மசெக) பிரசாரக் கூட்டத்தில் திரு டியோ இவ்வாறு பேசினார்.
“சிங்கப்பூரின் ஒற்றுமை, வலுவான அரசாங்கம், நிலையான கொள்கைகள் ஆகியவை அனைத்துலக நிறுவனங்களைச் சிங்கப்பூருக்கு ஈர்க்கின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
தாம் ஏன் மீண்டும் தேர்தலில் நிற்கவில்லை எனப் பலரும் கேட்டதாக அவர் கூறினார்.
“அடுத்த ஐந்த ஆண்டுகளுக்கு முழுமையாக, உற்சாகமாகக் குடியிருப்பாளர்கள் எதிர்பார்ப்பதை என்னால் செய்ய முடியுமா என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் வாக்கைக் கேட்பது பொறுப்பற்றது. அதனால்தான் நான் தேர்தலில் நிற்கவில்லை எனக் குடியிருப்பாளர்களிடம் கூறினேன்,” என்று அவர் சொன்னார்.
“தற்போது என் இரு குழுத்தொகுதிகளில் குடியிருப்பாளர்களைப் பிரதிநிதிக்க எங்களுக்கு வலுவான அணிகள் இருப்பதைக் காணமுடிகிறது. என்னால் நிம்மதியாக ஓய்வுபெற முடியும். என் குடியிருப்பாளர்களுக்கும் நிம்மதியிருக்கும் என நான் நம்புகிறேன்,” என்றார் மூத்த அமைச்சர் டியோ.
தொடர்புடைய செய்திகள்
தொலைநோக்குப் பார்வையுடன் மசெக: டெஸ்மண்ட் லீ
பல எதிர்க்கட்சிகளும் மசெக அரசாங்கம் தவறான பாதையில் செல்கிறது என்று கூறிவருவதற்கு தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ பதிலடி கொடுத்துள்ளார்.
“எப்பொழுதும் எங்களிடம் அனைத்துப் பதில்களும் இருக்காது. ஆனால், நாங்கள் சரியான பாதையில்தான் செல்கிறோம், புதிய வழியை அமைக்கிறோம். தற்போதைய சவால்களைக் கையாளும் அதேநேரம் எதிர்காலத்தின்மீதும் மசெக ஒரு கண் வைத்துள்ளது,” என்று அவர் சொன்னார்.
“புதிய பொருளியல் சூழல் எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. நிலையற்ற பொருளியல் சூழலை, குறிப்பாக விலைவாசி உயர்வு, வேலைப் பாதுகாப்பு குறித்த உங்கள் அச்சங்களைக் கையாள்வதே நாம் முதன்மையாகச் செய்யவேண்டியது எனப் பிரதமர் கூறியுள்ளார்.
“நாம் தொடர்ந்து நம் ஊழியர்களையும் நிறுவனங்களையும் மிகவும் வேறுபட்ட உலகிற்குத் தயார்படுத்த வேண்டும்,” என்று அமைச்சர் லீ கூறினார்.

