மோண்ட்ஃபர்ட் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர், அண்மையில் பள்ளி உணவகத்தில் சக மாணவர் ஒருவரைக் கொடுமைப்படுத்திய சம்பவம், இணையவாசிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்குமாறு பலரும் அறைகூவல் விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து சிஎன்ஏவிடம் பேசிய அப்பள்ளியின் துணை முதல்வர் வில்சன் டே, இச்சம்பவம் பற்றி பள்ளிக்குத் தெரியும் என்றும் இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
“சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, அவர்களின் பெற்றோரையும் நாங்கள் ஈடுபடுத்தியுள்ளோம். தங்கள் நடத்தை தவறானது என்பதை ஏற்றுக்கொண்ட அந்த மாணவர்கள், இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளனர்,” என்று திரு டே விவரித்தார்.
இச்சம்பவத்தைக் காட்டும் காணொளி, சனிக்கிழமை (பிப்ரவரி 22) ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. மாணவர் ஒருவரை சிலர் தரையில் தள்ளிவிட்டு பலமுறை உதைப்பதையும் மற்றவர்கள் அவர்களை உற்சாகப்படுத்துவதையும் காணொளி காட்டியது.
இச்சம்பவம் எப்போது நிகழ்ந்தது என்பது பற்றித் தெரியவில்லை என்றாலும், சமூக ஊடகத்தில் அக்காணொளி வேகமாகப் பரவியது. மாணவர் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்களைப் பள்ளிகள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
“கொடுமைப்படுத்துவோருக்குப் பொதுவெளியில் பிரம்படி விதிக்க வேண்டும்,” என டிக்டாக் பயனர் ஒருவர் கருத்து பதிவிட்டார்.
பள்ளிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்ட வேறு சிலர், இந்த விவகாரத்தை தங்கள் கையில் எடுக்கும்படி பெற்றோரிடம் வலியுறுத்துகின்றனர்.

