வேலையிடக் காயங்கள் இழப்பீட்டுச் சட்டப்படி தங்கள் கடமைகளை நிறைவேற்றாத முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், போலியாக இழப்பீடுகளைக் கோரி மோசடி செய்ய முற்படும் ஊழியர்களும் தண்டிக்கப்படுவர் என்றும் அமைச்சு கூறியது.
வேலையிடக் காயங்களுக்கான காப்புறுதியை வாங்குவது உள்ளிட்ட கடமைகளைச் செய்யத் தவறும் ஊழியர்களுக்கு 15,000 வெள்ளி வரையிலான அபராதமோ 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தக் கடமையை ஆற்றத் தவறியதன் பேரில் ஆண்டுக்கு இரண்டு முதலாளிகள்மீது மனிதவள அமைச்சு சட்ட ரீதியான நடவடிக்கையை எடுத்துள்ளது.
செய்தியாளர்களுடன் மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடத்திய கூட்டத்தில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
அந்த முதலாளிகளுக்கு ஆளுக்கு மொத்தம் 8,000 வெள்ளி அபராதம் அல்லது மூன்று வாரங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வேலையிட விபத்துகளைப் பற்றி தாமதமாக அதிகாரிகளிடம் தெரிவிப்பது உள்ளிட்ட குற்றங்களைச் செய்திருந்த முதலாளிகளும் தண்டிக்கப்பட்டனர்.
சம்பளம், வயது, குடியுரிமை ஆகிய பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டு எல்லா ஊழியர்களுக்குமே வேலையிடக் காயங்கள் இழப்பீட்டுச் சட்டம் பொருந்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
வேலை செய்யும்போது ஏற்படும் காயங்கள், வேலையுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளிட்டவை இச்சட்டத்தில் அடங்குகின்றன.
உடலுழைப்பு தேவைப்படும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் 2,600 வெள்ளிக்கும் குறைவாக மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் முதலாளிகள் வேலையிடக் காயங்களுக்கான காப்புறுதியை வாங்க வேண்டும் என்பது கட்டாயம்.
போலியாக இழப்பீடு கோரும் முதலாளிகளுக்கு 15,000 வெள்ளி வரையிலான அபராதமோ 12 மாதச் சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மனிதவள அமைச்சு, ஆண்டுக்கு இரண்டு ஊழியர்கள்மீது இதன் தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளது.
குற்றம் உறுதிசெய்யப்பட்ட ஊழியர்களுக்கு மூன்று வாரங்களுக்கும் 13 வாரங்களுக்கும் இடைப்பட்ட தண்டனைக்காலம் விதிக்கப்பட்டது. எஞ்சியுள்ள வழக்குகளில் ஊழியர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதபோதும் அவர்கள் கோரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
வேலையிடக் காயங்கள் தொடர்பான இழப்பீடுகளைக் கேட்பதற்கான நியாயமான, சீரான கட்டமைப்பை வேலையிடக் காயங்கள் இழப்பீட்டுச் சட்டம் வழங்குவதாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் (MWC) ஃபேஸ்புக் பதிவு வழியாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
“2024ல் வெளிநாட்டு ஊழியர் நிலையம், 602 வேலையிடக் காயம் மற்றும் மருத்துவ உதவி சம்பவங்களைக் கையாண்டுள்ளது. இதுவரையிலும் நாங்கள் ஆதரித்துள்ள எந்த வழக்கிலும் போலியான இழப்பீட்டுக் கோரிக்கையை எதிர்கொள்ளவில்லை,” என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

