ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி வழங்குநர்களுக்குப் புதிய நிபந்தனைகள்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி வழங்குநர்களுக்குப் புதிய நிபந்தனைகள்

2 mins read
மொத்தம் 500 பயிற்சி வழங்குநர்கள் புதிய, தேவையுள்ள திறன்களுக்கான 9,500 வகை பயிற்சிகளை வழங்குகின்றனர். அவர்களுக்கு இப்புதிய நிபந்தனைகளும் வழிகாட்டி நெறிமுறைகளும் பொருந்தும்.
4bbbf127-8d72-4b29-87d1-3c7511159d18
பயிற்சியின் தரத்தை மேம்படுத்தவும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மூலம் ஊழியர்களை எதிர்காலத்துக்குத் தயாராக்குவதற்கான ஆதரவுக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் அங்கமாக இப்புதிய நிபந்தனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பணிகளுக்குத் தேவைப்படும் முக்கியத் திறன்களையும், பயிற்சிகளின் தரத்தையும் மேம்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமாக, பயிற்சி வழங்குநர்களுக்கான நிபந்தனைகளை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு கடுமையாக்கியுள்ளது .

புதிய நிபந்தனைகள் குறித்தும் வழிகாட்டுதல்கள் குறித்தும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) நடைபெற்ற பயிற்சி, பெரியோர்களுக்கான கல்வி (Training and Adult Education) மாநாட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் தேவை அதிகரித்துள்ள புதிய திறன்களின் பட்டியலை வெளியிட்டதையடுத்து அந்த வழிமுறைகளையும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சுட்டியது.

மொத்தம் 500 பயிற்சி வழங்குநர்கள் புதிய, தேவையுள்ள திறன்களுக்கான 9,500 வகை பயிற்சிகளை வழங்குகின்றனர். அவர்களுக்கு இப்புதிய நிபந்தனைகளும் வழிகாட்டி நெறிமுறைகளும் பொருந்தும் என்று அமைப்பு கூறியது.

இம்மாநாட்டில், பாடநெறி ஒப்புதல் திறன் பட்டியல், நிறுவன ஆதரவுகள், பயிற்சித் தரம், விளைவுகளை அளவிடும் ஆய்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

பயிற்சி வழங்குநர்கள் தேவையான திறன்களை வழங்குவதன் மூலம் உள்நுழைவது, ஊழியர்களைப் பயிற்சிகளுக்கு அனுப்ப முதலாளிகளுடன் ஒப்பந்தமிடுவதன் மூலம் நிலைத்திருப்பது ஆகியவை முக்கியம் என்றும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கூறியது.

2025 டிசம்பர் 31 முதல், நிதி ஆதரவு புதுப்பிக்கப்படுவதற்குக் குறைந்தது 40 விழுக்காடு பங்கேற்பாளர்கள் நிறுவனங்களால் அனுப்பப்பட வேண்டும்.

வரும் ஜூன் 1ஆம் தேதி முதல், ஒவ்வொரு பயிற்சியும் இரு முக்கிய நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். முதலாவதாக, பயிற்சித் தரம், விளைவு அளவீட்டில் (TRAQOM) குறைந்தது 75 விழுக்காடு பெறவேண்டும். இரண்டாவது, தர அளவீட்டில் குறைந்த அளவை எட்டக்கூடாது.

அதேபோல, நிதி ஆதரவினை நாடும் புதிய பயிற்சி வழங்குநர்கள் ஏதேனும் ஒரு நிபந்தனையை நிறைவுசெய்வதும் அவசியம். அந்த நிபந்தனைகளுள் ஒன்றின்படி, புதிய திறன்களுக்கான பயிற்சிகளில் குறைந்தது 50 விழுக்காடு பாடநெறி ஒப்புதல் திறன் பட்டியலில் உள்ள திறன்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

இப்புதிய நிபந்தனைகள் பணிக்கும், முதலாளிகளுக்கும் உதவும் வகையில் பயிற்சிகள் வடிவமைக்கப்படுவதை உறுதிசெய்யுமென்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் குறிப்பிட்டது.

இந்த மாற்றங்கள் புதிய திறன்களுக்கான பயிற்சிகளுக்குப் பொருந்தும். ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட வேறு துறைகளுக்கு மாறுவதற்கான பயிற்சிகள் இம்மாற்றங்களால் பாதிப்படையாது.

குறிப்புச் சொற்கள்