தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ பயிற்சி வகுப்புகளின் தரத்தை உயர்த்த 2026க்குள் மேலும் கடுமையான நடைமுறைகள்

2 mins read
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ பயிற்சி வகுப்புகள்
fbf57d60-4df8-4fa9-8819-8ad13df251ec
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து, புதுப்பிக்கப்படவேண்டிய பயிற்சி வகுப்புகள் புதிய தகுதிவிதிகளைப் பூர்த்திசெய்யவேண்டும்.  - படம்: சாவ் பாவ்

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ அமைப்பு நிதி ஆதரவு வழங்கும் பயிற்சி வகுப்புகளின் தரத்தை உயர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, குறைவான தரமதிப்பீட்டைக் கொண்ட பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்படும்.

அத்தகைய பயிற்சி வகுப்புகள் குறைந்தது மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்படும். அதோடு, அதனை விளம்பரப்படுத்தவோ புதிய விண்ணப்பதாரர்களை ஏற்றுக்கொள்ளவோ வழங்குநர்களுக்குத் தடை விதிக்கப்படும்.

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ பட்டியலில் மீண்டும் சேர்வதற்கு முன்னர், தங்களின் பயிற்சி வகுப்புகளை மேம்படுத்தியிருப்பதற்கான ஆதாரங்களைப் பயிற்சி வழங்குநர்கள் காண்பிக்கவேண்டும்.

இவ்வாண்டு அக்டோபர் முதல் நடப்பில் இருக்கும் இந்தப் புதிய நடைமுறை, பயிற்சி வகுப்புகளின் தரத்தை உயர்த்த 2026க்குள் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் மற்ற சில நடைமுறைகளில் முதலாவதாகும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து, புதுப்பிக்கப்படவேண்டிய பயிற்சி வகுப்புகள் புதிய தகுதிவிதிகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். குறைந்தது 75 விழுக்காட்டுப் பங்கேற்பாளர் விகிதத்தை எட்டுவது அவற்றில் ஒன்றாகும்.

தங்கள் பயிற்சி வகுப்புகள் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை வழங்குநர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள், பயிற்சி வகுப்புகள் தொடர்பான கருத்துசேகரிப்பு ஆய்வுக்கு குறைந்தபட்சம் 75 விழுக்காட்டினர் பதிலளிக்க வேண்டும். அதோடு, அவை ஆகக் குறைவான தரநிலைப் பிரிவில் இடம்பெறக்கூடாது என்று ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ அமைப்பின் விதிமுறை, தரக் குழுமத்தின் குழும இயக்குநர் ஏஞ்சலா டான், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் நடந்த நேர்காணலில் கூறினார்.

இந்தப் புதிய நடைமுறைகள், பயிற்சி வகுப்புகளின் தரத்தை வலுப்படுத்த தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதி என்றார் அவர். 300க்கும் மேற்பட்ட பயிற்சி வழங்குநர்கள் வழங்கும் 29,000க்கும் அதிகமான ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ பயிற்சி வகுப்புகள் உள்ளன.

சென்ற ஆண்டு, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ ஆதரவிலான பயிற்சித் திட்டங்களில் 520,000 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 200,000 பேர் பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் ஊழியர்கள்.

முன்னதாக, பயிற்சி வகுப்புகள் புதுப்பிக்கப்படுவதற்கான தகுதிவிதிகளில், செல்லுபடியான காலகட்டத்தில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைக் காட்டுவது, தொழில்துறைத் தேவைகளுக்கேற்ப இருப்பது ஆகியவை அடங்கும்.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, குறிப்பிட்ட சில தகுதிகளை நிறைவேற்றத் தவறினால், பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று திருவாட்டி டான் கூறினார்.

சென்ற ஆண்டு நவம்பரிலிருந்து, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ பயிற்சி வழங்குநர்களை மதிப்பிடும் முறையை மேம்படுத்தியுள்ளது.

பயிற்சி வழங்குநர்கள் நல்ல பயிற்சி வழிமுறைகளைக் கொண்டிருப்பது, கற்பிக்க வந்தவர்களுக்கு நிர்வாக ஆதரவு வழங்குவது, நல்ல பயிற்றுவிப்பாளர்களையும் தரமதிப்பீடுகளையும் கொண்டிருப்பது ஆகியவற்றை உறுதிசெய்வதே அமைப்பின் நோக்கம்.

குறிப்புச் சொற்கள்