சாலையில் விபத்து ஏற்படுத்தி மரணம் அல்லது பெரிய காயங்கள் விளைவிப்போருக்கு கடுமையான தண்டனையும் அதிகபட்ச சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும்.
இருப்பினும் சிலநேரம் குறைந்த பாதிப்புகள் ஏற்படுத்தியவர்களும் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் விபத்துக்கு முழுமையான காரணமாக இருக்கமாட்டார்கள், மற்றவர்களின் தவறும் விபத்துக்கு காரணமாக இருக்கும்.
அதனால் கடுமையான போக்குவரத்து விதிமுறைகள் சிலவற்றில் திருத்தம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் குறைந்த பாதிப்புகளை விபத்தின்மூலம் உண்டாக்குபவர்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனைகளை குறைத்து விதிக்கக்கூடும்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 11) மசோதா வாசிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
மசோதாவின் வரைவில், முதல்முறை ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி கடுமையான காயங்கள் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் குற்றவாளிக்கு கட்டாயம் விதிக்கப்படும் குறைந்தபட்ச சிறைத் தண்டனை நீக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய விதிமுறைப்படி முதல்முறை ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி கடுமையான காயங்கள் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மேலும், வாகன ஓட்ட ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை கட்டாயம் தடை விதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
புதிய மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் இவை நீக்கப்படும்.
இருப்பினும் விபத்தின் மூலம் கடுமையான காயம் ஏற்படுத்தியவருக்கு அதிகபட்ச தண்டனையான ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் மரணம் ஏற்படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டனையான எட்டு ஆண்டு சிறைத் தண்டனையிலும் எந்த மாற்றமும் இல்லை.
இதுகுறித்து உள்துறை அமைச்சும் விளக்கம் கொடுத்தது.
“அண்மையில் புக்கிட் பாத்தோக் வெஸ்டில் சாலையில் சிவப்பு விளக்கு இருக்கும் போது டாக்சி ஓட்டுநர் கவனக்குறைவாக சாலையை கடந்தார். இதனால் மற்றொரு கார் மீது டாக்சி மோது விபத்து ஏற்பட்டது.
“விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுநருக்கு கழுத்து, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் 25 நாள்கள் மருத்துவ விடுப்பில் இருந்தார். பின்னர் அவர் முழுமையாக குணமடைந்தார்
“பெரிய விபத்தாக இருந்தாலும் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான பாதிப்பில்லை.
“இருப்பினும் டாக்சி ஓட்டுநர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கட்டாயம் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் எட்டு ஆண்டுகள் கார் ஓட்ட தடையும் விதிக்கப்படும்.
“தற்போது வரையப்பட்ட மசோதாவில் இந்த குற்றத்திற்கு கட்டாயம் விதிக்கப்படும் குறைந்தபட்ச ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் எட்டு ஆண்டுகள் கார் ஓட்ட தடையும் நீக்கப்படும்,” என்று உள்துறை அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
இருப்பினும் நீதிமன்றங்கள் வழக்கின் நிலையை அறிந்து தண்டனைகளை விதிக்கும் என்று அமைச்சு தெளிவுபடுத்தியது.
மீண்டும் மீண்டும் அதே போக்குவரத்து குற்றங்கள் செய்பவர்களின் கட்டாய தண்டனைகளிலும் சில மாற்றங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

