தனியார் வீடு வாங்குபவர்களைப் பாதுகாக்கவும், வீடு தொடர்பில் அவர்கள் கூடுதலான முடிவுகளை எடுக்கவும் ஒழுங்குமுறை மாற்றங்கள் செய்யப்படும். இது ஒட்டுமொத்த தொழில்துறைத் தரத்தை உயர்த்தும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டின் முற்பாதியில் அரசு நில விற்பனை திட்டத்தின் கீழ் தனியார் வீடு விநியோகம் சுமார் 4,500 புதிய வீடுகளுக்கு அதிகரிக்கப்படும். இது ஒட்டுமொத்த விநியோகத்தை 58,000க்கும் மேற்பட்ட தனியார் குடியிருப்பு வீடுகளாகக் கொண்டுவரும் என்று திரு சீ, வியாழக்கிழமை (நவம்பர் 13) அன்று தெரிவித்தார்.
இந்த விதி மாற்றங்கள் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமலுக்கு வரும். மேலும் குடியிருப்புத் திட்டத்தில் கட்டமைப்புச் சுவர்கள், குப்பை போடும் இடங்களைக் குறிப்பிடுவது போன்ற புதிய வீட்டுத் திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை வீட்டு மேம்பாட்டாளர்கள் விற்பனை ஆவணங்களில் வழங்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.
“வீட்டு மேம்பாட்டாளர்களுக்கும் வீடு வாங்குபவர்களுக்கும் இடையிலான சாத்தியமான கருத்து வேறுபாடுகளைக் குறைப்பதற்காகவும், வீட்டு பரப்பளவு குறித்து வீடு வாங்குபவர்களுக்கு முன்கூட்டியே தெளிவை வழங்குவதற்காகவும் இது செய்யப்படுகிறது,” என்று ஷங்ரிலா ஹோட்டலில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் (ரெடாஸ்) 66வது ஆண்டு விழாவில் உரையாற்றியபோது திரு சீ கூறினார்.
வீட்டு விற்பனையின்போது, அங்கீகரிக்கப்பட்ட கட்டடத் திட்டங்களின் அடிப்படையில், அறைகள் மற்றும் இடங்கள் தெளிவாகக் குறிக்கப்பட்ட, அளவிடப்பட்ட வீட்டுப் பரப்பளவையும், பொது வசதிகளைக் காட்டும் விவரங்களையும் வீட்டு மேம்பாட்டாளர்கள் தற்போது வழங்க வேண்டும்.
வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க, வீட்டு மேம்பாட்டாளர்கள் தங்கள் கடந்த காலத் திட்டங்களின் கட்டுமானத் தர மதிப்பீட்டு அமைப்பு (கான்குவாஸ்) தரநிலை உட்பட, அவர்களின் முன்னைய பணிகள் குறித்த தகவல்களையும் உத்தேச வீடு வாங்குபவர்களுக்கு வழங்க வேண்டும்.
அரசாங்கத் திட்டங்கள் மற்றும் பெரிய மேம்பாடுகள் நிறைவடையும்போது, வேலைப்பாட்டின் தரத்தை மதிப்பிடுவதற்கான சிங்கப்பூரின் தேசிய தரநிலையாக கான்குவாஸ் உள்ளது. இது பொதுவாக, $5 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்பந்த மதிப்புள்ள தனியார் கூட்டுரிமை வீடுகள் மற்றும் பொது வீடமைப்பு மேம்பாடுகள் போன்ற பெரிய அளவிலான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மதிப்பீட்டுச் செயல்முறை மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. உள் பூச்சுகள் மற்றும் நிறுவல் முறைகள், சரிபார்ப்பு மற்றும் செயல்பாட்டுச் சோதனைகள், வெளிப்புற பூச்சுகள் ஆகியவையே அவை.
தொடர்புடைய செய்திகள்
இது உத்தேச வீடு வாங்குபவர்கள், வீட்டு மேம்பாட்டாளர்களின் திட்ட தரநிலைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும், நல்ல தரமான திட்டங்களைத் தொடர்ந்து வழங்கிய வீட்டு மேம்பாட்டாளர்களைச் சிறப்பாக அடையாளம் காணவும் அனுமதிக்கும் என்று அமைச்சர் விளக்கினார்.

