உலகளாவிய நிலையற்றத்தன்மை மோசமடைந்து வரும் நிலையில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் மிக அணுக்கமாக இணைந்து தற்காப்பு, கல்வி, கலாசாரம், விளையாட்டு போன்ற துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டு வெளிப்படையான, விதிமுறைகளுக்கு உட்பட்ட உலகளாவிய வர்த்தக முறையை நிலைநாட்டுவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வலுவான உறவு இருப்பதாகவும் இதுதொடர்பாக நீண்டகால வரலாற்றை இருநாடுகளும் பகிர்ந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவு தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதாக அதிபர் தர்மன் கூறினார்.
சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தையும் சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா இடையிலான அரசதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டதையும் அனுசரிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் தலைமை ஆளுநர் சேம் மோஸ்டின் ஆகஸ்ட் 3ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரைச் சிறப்பிக்கும் வகையில் நடத்தப்பட்ட அரசு விருந்துபசரிப்பில் அதிபர் தர்மன் கலந்துகொண்டு பேசினார்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் திருவாட்டி மோஸ்டின் சந்தித்துப் பேசினார்.
இருநாட்டு மக்களுக்கிடையே வலுவான உறவு, கலாசாரப் பரிமாற்றங்கள் ஆகியவை மறுஉறுதி செய்யப்பட்டன.
சிங்கப்பூர் - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முழுமையான உத்திபூர்வப் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் வோங்கும் திருவாட்டி மோஸ்டினும் பேசினர்.
தொடர்புடைய செய்திகள்
2015ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இப்பங்காளித்துவம், ஆறு முக்கிய அம்சங்களின்கீழ் 110க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவு செய்துள்ளது. பொருளியல் மற்றும் வர்த்தகம், தற்காப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள், அறிவியல் மற்றும் புத்தாக்கம், மக்களிடையிலான உறவுகள், மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல் ஆகியவை அவற்றில் அடங்கும்.
பிரதமர் வோங் இவ்வாண்டு ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது இருநாடுகளுக்கும் இடையிலான முழுமையான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை மேம்படுத்த இலக்கு கொண்டிருப்பதாகப் பிரதமர் வோங்கும் திருவாட்டி மோஸ்டினும் கூறினர்.
மேம்படுத்தப்படும் பங்காளித்துவத்தின்கீழ் தற்காப்பு, மீள்திறன்மிக்க விநியோகச் சங்கிலி, புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி, இணையம், முக்கிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இருநாடுகளிடையிலான ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.