தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அமைதி நிலவ, பாதுகாப்பு ஓங்க வலுவான சிங்கப்பூர் ஆயுதப் படையே காரணம்’

2 mins read
3dc5553e-f416-4415-8c2c-a8443900c4e7
சிங்கப்பூர் ஆயுதப் படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்து நிகழ்விலிருந்து விடைபெற்றுக்கொண்டு சென்ற மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குக்குக் கரவொலி எழுப்பி மரியாதை செலுத்தினர் விருந்தினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வலுவானதொரு சிங்கப்பூர் ஆயுதப் படையின்றி கடந்த சுமார் 60 ஆண்டுகளாக நிலவிவரும் அமைதியையும் முன்னேற்றத்தையும் சிங்கப்பூர் அடைந்திருக்க முடியாது.

அண்டைநாடுகளுடன் தற்போதுள்ள நிலையான, நட்பார்ந்த உறவுகளை ஏற்படுத்தி இருக்கவும் முடியாது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அமைதிக்கும் திடநிலைக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் தயார்நிலை கடந்த 60 ஆண்டுகளாகப் பெரும் பங்காற்றிவருவதை அவர் சுட்டினார்.

இதன் காரணமாக நாட்டைத் தற்காக்கும் விதமாக சிங்கப்பூர் ஆயுதப் படை இதுவரை போரிட்டதில்லை என்றார். சிங்கப்பூர் ஆயுதப்படைப் பயிற்சி நிலையத்தின் ராணுவப் பயிற்சிக்கழகத்தில் ஜூலை 26ஆம் தேதி சிங்கப்பூர் ஆயுதப் படை தினத்தை அனுசரிக்கும் இரவு விருந்து நிகழ்வில் உரையாற்றியபோது இதனைக் குறிப்பிட்டார்.

இருப்பினும், அமைதியின் விலை எந்நேரமும் விழிப்புநிலையில் இருத்தலே என்று கூறினார் அவர்.

ஆகாயம், நிலம், கடல் ஆகியவற்றுடன் மின்னிலக்கத் துறையிலும் சிங்கப்பூர் ஆயுதப் படை சேவையாளர்கள் ஒவ்வொரு நாள், ஒவ்வொரு நொடி காவல் காக்கின்றனர் என்று சுட்டினார்.

சிங்கப்பூர் ஆயுதப் படை நாட்டுக்குத் தேவைப்பட்டபோதெல்லாம், அது அதன் பங்கை ஆற்றியது என்றார் மூத்த அமைச்சர் லீ.

கடந்த 20 ஆண்டுகள் சிங்கப்பூர் ஆயுதப் படை மற்றும் நாட்டு முன்னேற்றத்திற்குப் பிரதமராக நல்கிய ஆதரவுக்காகவும் பங்களிப்புக்காகவும் விருந்து நிகழ்வில் மூத்த அமைச்சர் லீ கௌரவிக்கப்பட்டார்.

“சிங்கப்பூர் ஆயுதப் படை போன்று குறுகியகாலத்தில் எத்தகைய சூழலாக இருந்தாலும் அதற்கு ஏற்பச் செயல்படும் ஆற்றல், தயார்நிலை, வளங்கள் ஆகியவற்றைக் கொண்ட வேறு அமைப்புகள் நாட்டில் மிகச் சிலவே,” என்று குறிப்பிட்டார் அவர்.

இன்று சிங்கப்பூர் வெற்றிகரமான, வளர்ச்சியடைந்த நாடாக உள்ளது. சிங்கப்பூர் ஆயுதப் படை நம்பிக்கையான, நிபுணத்துவம் வாய்ந்த, மரியாதைக்குரிய படையாக விளங்குகிறது என்றார் மூத்த அமைச்சர் லீ.

குறிப்புச் சொற்கள்