சிங்கப்பூர் கிரான் ப்ரீ காலத்தில் அதிகமான ‘மைஸ்’ நிகழ்ச்சிகள்

1 mins read
8347ab5c-b159-48a2-b6e0-e97369195ac3
செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் கிரான் ப்ரீ கார் பந்தயத்தை முன்னிட்டு, 28க்கும் மேற்பட்ட ‘மைஸ்’ நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. - படம்: லியான்ஹ சாவ்பாப்

இவ்வாண்டின் ‘ஃபார்முலா ஒன் கிரான் ப்ரீ’ கார்பந்தயப் போட்டிக்குக் குறைவானவர்களே செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்தக் காலகட்டத்தின்போது ‘மைஸ்’ (கூட்­டங்­கள், ஊக்­கு­விப்­பு­கள், மாநாடுகள், கண்­காட்­சி­கள்) நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து வலுவான ஈர்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மரினா பேயில் நடைபெறவிருக்கும் கார்பந்தயப் போட்டியை முன்னிட்டு 28க்கும் அதிகமான ‘மைஸ்’ நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு கார்பந்தயக் காலகட்டத்தின்போது இருந்த 25 நிகழ்ச்சிகளைக் காட்டிலும், இது சற்று அதிகம்.

கொவிட்-19 கிருமிப் பரவலினால் ஈராண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட இரவு நேரக் கார்பந்தயப் போட்டி சென்ற ஆண்டு மீண்டும் தொடங்கியது.

இவ்வாண்டின் கார்பந்தயத்திற்கு 250,000 பேர் செல்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சென்ற ஆண்டு சாதனை அளவாகப் பந்தயத்திற்குச் சென்ற 302,000 பேரைக் காட்டிலும் அது கிட்டத்தட்ட 17 விழுக்காடு குறைவு.

2019ஆம் ஆண்டில் 268,000 பேரும், 2018ஆம் ஆண்டில் 263,000 பேரும் கார்பந்தயப் போட்டிக்குச் சென்றிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்