சிங்கப்பூரில் பலத்த காற்று; ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மணிக்கு 83.2 கிலோமீட்டர் வேகம்

சிங்கப்பூரில் பலத்த காற்று; ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மணிக்கு 83.2 கிலோமீட்டர் வேகம்

2 mins read
fb31c16f-f9dc-495b-ae74-d80d96ecdc00
செப்டம்பர் 17ஆம் தேதி இரவு பலத்த காற்று வீசியதில் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலாக்கா நீரிணையிலிருந்து தென்சீனக் கடலை நோக்கி மிக விரைவாக வீசிய கனமழையுடனான பலத்த காற்றின் காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் இரவு 7 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பலத்த காற்று வீசியது.

இரவு 7.33 மணி அளவில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மணிக்கு 83.2 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின்கீழ் செயல்படும் சிங்கப்பூர் வானிலை மையம் தெரிவித்தது.

பாசிர் பாஞ்சாங், சாங்கி, செம்பவாங், சிலேத்தார் உட்பட பல இடங்களில் பலத்த காற்று வீசியது.

பாசிர் பாஞ்சாங், சாங்கி, செம்பவாங், சிலேத்தார் ஆகிய வட்டாரங்களில் மணிக்கு 70 கிலோமீட்டருக்கும் அதிகமாக காற்று வீசியது.

1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியன்று தெங்காவில் மணிக்கு 144.4 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இதுவே சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆக பலத்த காற்று.

செப்டம்பர் 17ஆம் தேதி இரவு சிங்கப்பூரில் பதிவான சராசரி மழையின் அளவு 10.33 மில்லிமீட்டர்.

பீஷானில் ஆக அதிகமாக மழை பெய்தது.

அங்கு மழையின் அளவு 26 மில்லிமீட்டராகப் பதிவானது.

செப்டம்பர் 17ஆம் தேதியன்று சிங்கப்பூரில் கனமழையுடன் பலத்த காற்று வீசியபோது சிங்கப்பூரின் வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 25 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டு இருந்தது.

இரவு 7.25 மணி அளவில் ஜூரோங் தீவில் வெப்பநிலை 23.7 டிகிரி செல்சியசாகப் பதிவானது.

இதுவே அன்று பதிவு செய்யப்பட்ட ஆகக் குறைவான வெப்பநிலை.

இந்நிலையில், இம்மாதத்தின் இறுதி வாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் பிற்பகல் நேரங்களில் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்