நடப்பதற்குச் சிரமப்படும் பயனர்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் நிறுவனமான ‘ஸ்ட்ரட்’, தானியக்க நடமாட்டச் சாதனம் ஒன்றை வடிவமைத்துள்ளது.
அந்த வாகனத்தைப் பயன்படுத்தி, தாராளமான வெற்றிடங்கள் உடைய கட்டடங்களில் அவர்கள் உலா வரலாம்.
2023ஆம் ஆண்டு ‘ஸ்ட்ரட்’ புது நிறுவனம் நிறுவப்பட்டது. தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘இவி1’ என அழைக்கப்படும் சாதனத்தை அந்நிறுவனம் கண்டறிந்தது.
இம்மாதம் நெவாடாவின் லாஸ் வேகாசில் நடந்த உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப வர்த்தகக் கண்காட்சியில் அதை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
சிங்கப்பூரில், ‘இவி1’ஐ மருத்துவமனைகளில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக‘ஸ்ட்ரட்’ நிறுவனர் டோனி ஹாங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.
அதன்மூலம், நடப்பதற்குச் சிரமப்படும் நோயாளிகளும் பார்வையாளர்களும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
ஒளி கண்டறியும் சாதனம், சுற்றுச்சூழலைக் கண்டறியும் 25 உணர்கருவிகள், இரு கண்காணிப்புக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் ‘இவி1’ வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
அதன் வலது கைப்பிடியின் பக்கவாட்டில் இணைக்கப்பட்ட திரை வழியாக வாகனத்தைச் சுற்றி இருக்கும் காட்சிகளைப் பயனர்கள் காண முடியும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், குறிப்பிட்ட ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் சிறிய வாகனம், பாதசாரிகள், சுவர்கள் போன்ற நிலையான, நகரும் தடைகளைக் கடந்துச் சென்று இலக்கை அடைவதற்கானத் துல்லியமானப் பாதையை ‘இவி1’ஆல் கணக்கிட முடியும் என டாக்டர் ஹாங் கூறினார்.
கிட்டத்தட்ட எந்த மொழியிலும் வாய்மொழி வழிமுறைகளை அச்சாதனத்தால் புரிந்து கொள்ள முடியும்.
‘ஓப்பன் ஏஐ’யின் ‘சாட் ஜிபிடி’ போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டிருப்பதால் பயனர்களின் கட்டளைகளுக்கு ஏற்றவாறு அது இயங்கும்.
அவ்வாகனத்தின் விலை $9,600. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ‘ஸ்ட்ரட்’ நிறுவனத்தின் இணையத்தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் விநியோகம் தொடங்கும்.

