மாணவர் பராமரிப்பு சேவை வழங்குவோர் வைப்புத்தொகை செலுத்தவேண்டும்: கல்வி அமைச்சு

2026 டிசம்பரிலிருந்து புதிய நடைமுறை

மாணவர் பராமரிப்பு சேவை வழங்குவோர் வைப்புத்தொகை செலுத்தவேண்டும்: கல்வி அமைச்சு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Sep 2026 - 8:28 pm

2 mins read

சிங்கப்பூர்த் தொடக்கப் பள்ளிகளில் புதிதாக நியமிக்கப்படும் மாணவர் பராமரிப்பு சேவை நடத்துநர்கள், கல்வி அமைச்சு அறிமுகம் செய்த பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக ஒரு மாதக் கட்டணத்துக்கு ஈடான தொகையைப் பாதுகாப்பு வைப்புத்தொகையாகச் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைப்புத்தொகையின் அளவு நிலையத்தின் சேர்க்கையைப் பொறுத்து முடிவுசெய்யப்படும்.

தற்போதைய குத்தகை காலாவதியாகும்போது புதிய நடைமுறை இவ்வாண்டு டிசம்பரிலிருந்து கட்டங்கட்டமாக அமல்படுத்தப்படும்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் லிட்டில் புரோஃபெசர்ஸ் லேர்னிங் நிலையத்தின் ஒப்பந்தம் ரத்தானதை அடுத்து எட்டுப் பள்ளிக்கூடங்களில் உள்ள 1,800 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஒப்பந்த நிபந்தனைகளை நடத்துநர் நிறைவேற்றாவிடில், அமைச்சு அதன் வைப்புத்தொகையைப் பயன்படுத்த முடியும் என்று கல்வி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவது உள்ளிட்ட நிதி இழப்புகளுக்கு அதனைப் பயன்படுத்த முடியும் என்றார் அவர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து சம்பள நிலுவையும் மத்திய சேமநிதி பங்களிப்பும் வழங்கப்படவில்லை என்று 54 ஊழியர்கள் புகார் அளித்தனர்.

பிப்ரவரி 7ஆம் தேதி வழங்கப்படவேண்டிய ஜனவரி மாதச் சம்பளம் வராததால் லிட்டில் புரோஃபசர்ஸ் நிலைய ஊழியர்களில் பலர் பிப்ரவரி 10ஆம் தேதியிலிருந்து வேலை செய்வதை நிறுத்திக்கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

அதற்குமுன் நான்கு புதிய நடத்துநர் நிறுவனங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஊழியர்கள் பள்ளிநேரத்திற்குப் பிந்திய பராமரிப்பில் உதவினர். பாதிக்கப்பட்ட பெற்றோர் சேவைக்கான கட்டணத்தை அப்போது செலுத்தத் தேவையிருக்கவில்லை.

வைப்புத்தொகையைச் செலுத்தும்படி கூறுவதற்கு அப்பால் நிறுவனங்களின் நிதி நிலைமையை அடிக்கடி ஆராய்ந்து, நிதி நெருக்கடிகளை முன்கூட்டியே கண்டறிய கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

மோசமான சூழலில் கல்வியமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ரத்துசெய்து, அதனை வேறொரு நிறுவனத்திற்கு வழங்கிவிடும்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்பராமரிப்புவைப்புத்தொகைகல்வி அமைச்சுநடவடிக்கை