புக்கிட் பாத்தோக்கில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலையைக் கடந்த உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர், எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.
சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட காட்சிகளில், பேருந்து நிறுத்தத்தில் பேருந்துச் சேவை எண் 176 நின்றுகொண்டிருப்பதைக் காண முடிகிறது.
மேலும், காணொளிக் கருவி பொருத்தப்பட்ட அந்த வாகனம் பேருந்தைக் கடந்து சென்றபோது, மாணவர் ஒருவர் திடீரென பேருந்தின் முன்புறத்திலிருந்து சாலைக்குள் பாய்ந்து குறுக்கே ஓடியதையும் அதில் பார்க்க முடிந்தது.
சாலையைக் கடப்பதற்கு முன், வாகனங்கள் வருகிறதா என்பதைக்கூட அவர் கவனிக்கவில்லை.
நல்லவேளையாக, காணொளிக் கருவி பொருத்தப்பட்ட அந்த வாகனம் 20 கி.மீக்கும் குறைவான வேகத்தில் சென்றதால் , சரியான நேரத்தில் நிறுத்த முடிந்தது.
இந்தச் சம்பவம் ஹில்வியூ அவென்யூ சந்திப்பை நோக்கிச் செல்லும் புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 2ல் நடந்ததாக ‘ஏசியாஒன்’ தெரிவித்தது.
அந்த மாணவரின் அத்தகைய ஆபத்தான செயல் குறித்து சமூக வலைத்தளவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

