நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) 13ஆம் மாணவர் தங்குவிடுதியில் (Hall 13) 25 வயது ஆடவர் ஒருவர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) மாண்டுகிடந்தார்.
அறை ஒன்றுக்கு முன்னால் இருக்கும் பகுதியைக் காவல்துறை தடுப்புகள் போட்டு மூடியிருந்ததாக என்டியுவின் ரெடிட் தளப் பக்கத்தில் பயனர் ஒருவர் தெரிவித்தார். மருத்துவ உதவியாளர்களும் சம்பவ இடத்தில் காணப்பட்டனர்.
திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக ஏஷியஒன் ஊடகத்தின் கேள்விகளுக்குக் காவல்துறை பதிலளித்தது.
ஆடவர் ஒருவர் நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் உயிரிழந்ததை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தியதாகவும் காவல்துறை குறிப்பிட்டது. முதற்கட்ட விசாரணையில், ஆடவரின் மரணத்தில் சூது இருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை என்று காவல்துறை சொன்னது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
தங்கள் வளாகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததை நினைத்து பல்கலைக்கழகம் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாக என்டியு பேச்சாளர் ஒருவர் அறிக்கை மூலம் ஏஷியாஒன்னிடம் தெரிவித்தார்.
“இந்த சவாலான காலத்தில் மாண்ட மாணவரின் குடும்பத்தார், பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகம் ஆகிய தரப்புகளுக்கு ஆதரவளிப்பதற்கே நாங்கள் தற்போது ஆக அதிக முக்கியத்துவம் தருகிறோம்,” என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


