சக மாணவரை போத்தலால் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் 12 வயது மாணவர், காவல்துறை விசாரணையில் உதவி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) பிற்பகல் 2.00 மணியளவில் உட்லண்ட்சில் உள்ள பள்ளியிலிருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது. அங்கு 12 வயது மாணவர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சக மாணவர் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மாணவரின் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது என்று உட்லண்ட்சில் உள்ள அட்மிரால்டி உயர் நிலைப் பள்ளி தெரிவித்தது.
மருத்துவமனைக்கு மாணவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாகவும் மாணவர் சீராக இருப்பதாகவும் பள்ளி கூறியது.
மாணவரின் பெற்றோருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் அது சொன்னது.
இதில் சம்பந்தப்பட்ட 12 வயது மாணவருக்கு பள்ளி ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. அவர் மீது தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பள்ளி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ள பள்ளி, அது தொடர்பான விசாரணையில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
இதற்கிடையே காயம் அடைந்த மாணவர் ஜனவரி 7ஆம் தேதி மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மறுநாள் புதன்கிழமை (ஜனவரி 8) மாணவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று அவர் கூறினார்.
மென்மையான சுபாவம் கொண்ட மாணவரை இதற்கு முன் பலர் கிண்டல் செய்திருந்தாலும் இந்த அளவுக்கு இல்லை என்று உறவினரான ஜெரேமி கோ சொன்னார்.
இந்தச் சம்பவத்தால் மாணவர் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்துள்ளதால் பள்ளியிலிருந்து வருபவர்களை பார்க்க மறுப்பதாகவும் அவர் கூறினார்.
ஜனவரி 7ஆம் தேதி, அந்த மாணவர் புதிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து நான்கு நாள்கள்தான் ஆகியிருந்தது.


