தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடக்கக் கல்லூரிச் சேர்க்கைமுறையில் மாற்றம்: மாணவர்கள் கருத்து

3 mins read
66bef392-09e5-4074-9a0e-9baf5b19d122
மாணவர்கள் தங்களை முழுமையாக மேம்படுத்திக்கொள்ள அதிக நேரம் கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடக்கக் கல்லூரிகளில் 2028ஆம் ஆண்டில் சேரவுள்ள மாணவர்கள், ஆறு பாடங்களுக்குப் பதிலாக ஐந்து பாடங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுவர் என்று கல்வி அமைச்சின் அறிவிப்பு குறித்து மாணவர்கள் சிலர் தமிழ் முரசிடம் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

தற்போதைய ‘எல்1ஆர்5’ முறையின்படி, 20 அல்லது அதற்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் மட்டும் தொடக்கக் கல்லூரிக்குத் தகுதிபெற முடியும்.

புதிய மாற்றத்தின்படி மாணவர்கள் ‘எல்1ஆர்4’ அடிப்படையில் 16 அல்லது அதற்கும் குறைவான மதிப்புப்புள்ளிகள் எடுத்தால் தொடக்கக் கல்லூரிக்குச் செல்ல முடியும்.

இந்த மாற்றத்தால் தங்களின் பாடங்களில் ஒன்றை மாணவர்கள் குறைத்துக்கொள்ளலாம்.

பாடச்சுமையையும் அழுத்தத்தையும் குறைக்கப் புதிய முறை உதவக்கூடும் என்பது தமிழ் முரசிடம் பேசிய மாணவர்களின் பொதுவான கருத்து.

இருந்தபோதும், கூடுதலான பாடங்களை எடுத்து கற்றலை அகலப்படுத்துவதற்கு ‘எல்1ஆர்5’ முறை உதவுவதாக மாணவர்கள் சிலர் கருதுகின்றனர்.

புதிய மாற்றத்தை வரவேற்றாலும் இதனை முன்கூட்டியே அறிமுகம் செய்திருக்கலாம் என்று டன்மன் உயர்நிலைப் பள்ளி மாணவி குமரவேலு கமலசிவானி, 15, தெரிவித்தார்.

“அடைவுநிலை முறை அறிமுகமானபோது தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை எழுதிய மாணவர்களில் நானும் ஒருவர். அத்துடன், நான் உயர்நிலைப் பள்ளிக்கான பாட அடிப்படையிலான வகைப்பாட்டின்கீழ் தேர்வு எழுதப்போகும் இரண்டாவது ஆகக் கடைசி குழுவைச் சேர்ந்த மாணவர்களிலும் ஒருவராக இருந்தேன். இந்தப் புதிய அறிமுகத்தின் பலன்களைப் பெறாமல் போகிறேனே என்ற முறையில் சற்று வருத்தம்தான்,” என்று கமலசிவானி கூறினார்.

புதிய முறையின்படி மாணவர்கள் குறைவான பாடங்களில் கவனம் செலுத்துவது பாடச்சுமையைக் குறைக்கும் என்றாலும் அதிக பாடங்களைப் பயில்வது தொடக்கக் கல்லூரிக் கல்விக்குச் சிறந்தது என கமலசிவானி கருதுகிறார்.

புதிய மாற்றத்தால் மாணவர்கள் தங்களது வாழ்க்கைத்திறன் வளர்ச்சி மீது கவனம் செலுத்த முடியும் என்று ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர் சண்முகம் ஷியாம், 17, கருதுகிறார்.

“கவனம் செலுத்தும் ஆற்றலோடு வாழ்க்கைத் திறனை வளர்ப்பதும் இளம் வயதில் முக்கியம். பல்கலைக்கழக மாணவர்களிடம் ஏட்டுக்கல்வித் திறன் மட்டுமின்றி ஒட்டுமொத்த வாழ்க்கைத் திறன்களும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிகிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்தக் கருத்துடன் ஒத்துப்போகும் ஹுவா சோங் தொடக்கக் கல்லூரி மாணவி அர்ஜிதா பாலாஜி, 18, மாணவர்கள் மற்ற திறன்களைக் கற்பதற்கான இடத்தைக் கல்வி அமைச்சு நல்குவதை வரவேற்கிறார்.

“இதனால் கல்வித்தரம் குறையாது என்பதை நான் உறுதியாக நினைக்கிறேன். சிங்கப்பூரின் கல்விமுறையில் ஏட்டுக்கல்விக்கான முக்கியத்துவம் என்றுமே இருக்கும்,” என்றார் அவர்.

மேல்நிலைத் தேர்வுகளை முடித்துள்ள விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவர் ஸ்ரீநிதி நரசிம்மன், 19, மேல்நிலைத் தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட புள்ளிமுறை மாற்றத்தைப் போலவே இந்த மாற்றத்தையும் தாம் காண்பதாகக் கூறினார்.

வரும் 2026 முதல் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்­கான அதிகபட்சப் புள்ளிகள் 90லிருந்து 70ஆகக் குறைக்­கப்­படும்.

“இவை இரண்டுமே, மாணவர்கள் படிக்கவேண்டிய பாடங்களைக் குறைத்தன. மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தத்தை இது குறைத்தாலும் சில பாடங்களில் ஒரு சிலர் தேவையான முயற்சியைச் செலுத்தாமல் போகலாம்,” என்று ஸ்ரீநிதி கூறினார்.

குறிப்புச் சொற்கள்