மாரடைப்பால் மயங்கி விழுந்தவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய மாணவி

2 mins read
7fe8c50b-dc64-4c4f-b7e0-6cb3745aee28
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெஞ்சமின் வில்லியமிடமிருந்து சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க உடை அணிந்த ‘ஸ்னூபி பிளஷ்’ பொம்மையை மாணவி ஆல்வா வோங் (இடது) பெறுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நொவீனா ஸ்குவேரில் உள்ள ‘வெலாசிட்டி’ உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குத் திரும்பிய மாணவி ஒருவர் மாரடைப்பால் அசைவின்றி கிடந்த வெளிநாட்டவர் ஒருவரின் உயிரை இதயவியக்க உயிர்ப்பிப்புச் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார்.

மார்ச் 10ஆம் தேதி அச்சம்பவம் நடந்தது.

ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் உயர்நிலை 4ஆம் வகுப்பு பயிலும் 15 வயது ஆல்வா வாங் செஞ்சிலுவைச் சங்கத்தின் இளையர் அதிகாரியாகவும் உள்ளார்.

முதலுதவி பயிற்சி பெற்றிருந்த அவர், ‘செடிலே பேக்கரி’ கடைக்கு அருகே தரையில் மயங்கிக் கிடந்த ஒரு முதியவரையும் அவருக்கு அருகே செய்வதறியாது தவித்த ஒரு மாதையும் கண்டார்.

அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க யாரும் முன்வராத நிலையில், மாணவி ஆல்வா முன்வந்தார்.

இதயவியக்க உயிர்ப்பிப்புச் சிகிச்சையில் தான் கைத்தேர்ந்தவர் இல்லையென்றாலும் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுள் இருந்த தயக்கத்தை விடுத்து உதவ முன்வந்ததாக மாணவி ஆல்வா ஏப்ரல் 15ஆம் தேதி கூறினார்.

அவர் அளித்த அந்த முதலுதவிதான் மருத்துவ உதவியாளர் குழு சம்பவ இடத்திற்கு வரும்வரை அந்த வெளிநாட்டவரை உயிருடன் இருக்கச் செய்தது.

அந்தத் தம்பதியருடன் மருத்துவ அவசர உதவி வாகனத்தில் டான் டாக் செங் மருத்துவமனைக்குச் சென்ற ஆல்வி, அவர் காப்பாற்றப்பட்டார் என்பதை அறிந்ததும் நிம்மதி அடைந்ததாகக் கூறினார்.

மாணவி தங்களுக்குப் புரிந்த உதவி குறித்து கல்வி அமைச்சுக்கு அந்த முதியவரின் மனைவி மின்னஞ்சல் அனுப்பினார்.

அதில் அவர் குறிப்பிட்ட அடையாளத்தை வைத்து ஆல்வியாவை அமைச்சு கண்டறிந்தது.

உலகச் செஞ்சிலுவைச் சங்க தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 15ஆம் தேதி ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் நடந்த விழாவில் மாணவி ஆல்வியாவைச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பாராட்டியது.

குறிப்புச் சொற்கள்