சமூகத்தில் மூத்தோர் மேம்பட்ட வகையில் மூப்படைய உதவுவதில் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அனுபவம் பெறவுள்ளனர்.
இதன்தொடர்பில், அவர்களின் கல்வி நிலையங்கள், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்புடன் (ஏஐசி) ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி, தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவை நவம்பர் 27ஆம் தேதி ஏஐசியுடன் புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையெழுத்திட்டன.
அந்த நிகழ்ச்சி ஜூரோங் வெஸ்ட்டில் அமைந்துள்ள ஸு சி மூத்தோர் ஈடுபாட்டு, உதவி மையத்தில் (நன்யாங்) நடைபெற்றது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கையெழுத்து நிகழ்வைப் பார்வையிட்டார்.
“நிறுவனங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை நீண்டகாலமாக சமூகப் பணிகளை அவ்வப்போது செய்யக்கூடிய ஒன்றாகக் கருதின. ஆனால் சிங்கப்பூரில் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், மேலும் நீடித்த, தொடர் தொண்டூழிய முயற்சிகள் தேவைப்படுகின்றன,” என்று திரு ஓங் கூறினார்.
புரிந்துணர்வுக் குறிப்புகளின்கீழ், ஏஐசி வெவ்வேறு துறைகளில் உள்ள மாணவர்களுக்கு சமூகப் பராமரிப்பில் தொண்டூழிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும்.
மாணவர்கள் மூத்தோர் தலைமுறைத் தூதர் திட்டத்தில் சேர்ந்து, துடிப்புடன் மூப்படைதல் நிலையங்களில் அனுபவம் பெறலாம். திட்டத்தின்கீழ், அவர்கள் மூத்தோரை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்றுபார்ப்பார்கள்.
தொடர்புடைய செய்திகள்
ஆறு மாதகால முன்னோடித் திட்டம் ஜூலையில் தொடங்கியது. அதில், ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளையும் சேர்ந்த 60 மாணவர்கள் பங்கேற்றனர்.
முதலாம் ஆண்டு மாணவர் டோனல்ட் லீ, 19, தமது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டத்தில் பங்கெடுத்தார்.
மூத்தோருடன் மேலும் பயனுள்ள வழியில் எவ்வாறு பேசுவது என்பதைத் தெரிந்துகொள்ளவும், மூத்தோருக்கான அரசாங்கத் திட்டங்கள், கொள்கைகள் குறித்து கற்றுக்கொள்ளவும் அவர் இரண்டு நாள் பயிற்சிக்கும், ஐந்து பணியிடை பயிற்சிகளுக்கும் சென்றார்.
அதன் பிறகு அவர் ரெட்ஹில்லில் உள்ள ஒரு வீட்டில் மூத்தோரைச் சந்தித்தார்.

