தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடக்கக் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதில் 2028ஆம் ஆண்டுமுதல் மாற்றம்

4 mins read
a4a70939-ee77-41b4-ae38-5a8bf4e27873
இவ்வாண்டு உயர்நிலை இரண்டில் பயிலும் மாணவர்களுக்கு இது பொருந்தும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடக்கக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 2028ஆம் ஆண்டு முதல் ‘ஓ’ நிலைத் தேர்வுகளில் ஆறுக்குப் பதிலாக ஐந்து பாடங்களின் மதிப்புப்புள்ளிகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாண்டு உயர்நிலை இரண்டில் பயிலும் மாணவர்களுக்கு இந்த புதிய மாற்றம் பொருந்தும்.

கூட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கை மூலம் தொடக்கக் கல்லூரிகளில் நுழைவதற்கான தகுதிமுறையை மாற்றியமைப்பதால் மாணவர்கள் படிக்கும் பாடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

தற்போது மாணவர்கள் ‘ஓ’ நிலைத் தேர்வுகளில் ஆறு பாடங்களில் L1R5 பிரிவில் 20 அல்லது அதற்கும் குறைவான மதிப்புப்புள்ளிகள் எடுத்தால்தான் தொடக்கக் கல்லூரிகளுக்குச் செல்ல முடியும்.

புதிய மாற்றத்தின்படி, L1R5 முறை கணக்கில் எடுக்கப்படாது. மாறாக, மாணவர்கள் L1R4 அடிப்படையில் 16 அல்லது அதற்கும் குறைவான மதிப்புப்புள்ளிகள் எடுத்தால் தொடக்கக் கல்லூரிக்குச் செல்ல முடியும்.

இந்த மாற்றத்தால் மாணவர்கள் தாங்கள் பயிலும் பாடங்களில் ஒன்றைக் குறைத்துக்கொள்ளலாம். அதன்மூலம் கிடைக்கும் கூடுதல் நேரத்தில் தங்களை மேம்படுத்திக்கொள்ள விருப்பப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடலாம்.

“மாணவர்கள் தங்களை முழுமையாக மேம்படுத்திக்கொள்ள அதிக நேரம் கிடைக்கும். அவர்களுக்குப் பிடித்தமானவற்றில் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தலாம்,” என வியாழக்கிழமை (மார்ச் 6) நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.

தொடக்கக் கல்லூரிகளுக்கு நுழைவதற்கான பாடத் தேவைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அமைச்சர் சான் கூறினார்.

பாடங்களின் எண்ணிக்கை குறைவதால் தொடக்கக் கல்லூரிகளுக்கு நுழைவதற்கான குறைந்தபட்ச புள்ளிகளும் குறையும்.

L1R5 முறை 1989ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் முன்னேறியுள்ளதால் மாணவர்கள் தொடக்கக் கல்லூரிக்குச் செல்லத் தயாரா என்பது குறித்துக் கவலைப்பட அவசியமில்லை என்றார் அமைச்சர் சான்.

L1R4 முறையின்கீழ் ஆங்கிலம் அல்லது தாய்மொழிப் பாடமும் மூன்று தொடர்புடைய பாடங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கணக்கு/அறிவியல், மானுடவியல் பாடங்களில் குறைந்தது ஒன்றேனும் இடம்பெற வேண்டும்.

அத்துடன், உயர்தேர்ச்சி பெற்ற இரு பாடங்களில் ஒன்றை மட்டும் சேர்த்தால் போதும்.

மிலெனியா கல்விநிலையம் செல்லும் மாணவர்களுக்கும் புதிய L1R4 முறையே பின்பற்றப்படும். ஏற்கெனவே நடப்பில் இருக்கும் 20 மதிப்புப்புள்ளி வரம்பில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும், தொடக்கக் கல்லூரிக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் ஆறு மதிப்புப்புள்ளி, கணக்கு பாடத்தில் ஏழு, தாய்மொழி பாடத்தில் ஏழு மதிப்புப்புள்ளி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச மதிப்புப்புள்ளிகள் பெறாவிட்டாலும் நிபந்தனைகளின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படலாம்.

மாணவர்களின் மதிப்புப்புள்ளிகளின் மீதான கவனத்தைக் குறைக்க கல்வி அமைச்சு இத்தகைய மாற்றத்தைச் செயல்படுத்தவுள்ளது.

சென்றாண்டு பலதுறைத் தொழிற்கல்லூரி செல்வதற்கான தகுதிமுறையில் கல்வி அமைச்சு மாற்றம் செய்தது. முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாடு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

“இந்த மாற்றங்களை வைத்துப் பார்க்கும்போது இதே எண்ணிக்கையில் மாணவர்கள் தொடர்ந்து தொடக்கல்லூரிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார் அமைச்சர் சான்.

தொடக்கக் கல்லூரிகள், மிலெனியா கல்விநிலையம் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கை 2020லிருந்து 2024வரை 27 விழுக்காட்டில் நிலையாக இருந்து வந்துள்ளது.

இந்த புதிய மாற்றத்தால் தொடக்கக்கல்லூரிகள், மிலெனியா கல்விநிலையம் செல்வதற்கான ஊக்கப் புள்ளிகளுக்கான வரம்பு மூன்று புள்ளிகளுக்கு குறைக்கப்படும்.

மறுசீரமைப்புப் பணிகள் 

ஆங்கிலோ சீனத் தொடக்கக்கல்லூரி, கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரி, தேசியத் தொடக்கக் கல்லூரி, விக்டோரியா தொடக்கக் கல்லூரி ஆகியவை தொடக்கக் கல்லூரிகளைச் மறுசீரமைக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக மேம்படுத்தப்படவுள்ளன என்று அமைச்சர் சான் தெரிவித்துள்ளார்.

இந்தப் புத்துணர்ச்சி திட்டம் முதன்முதலில் 2019ல் அறிவிக்கப்பட்டது. மேலும் முதல் கட்டம் 2025க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, மேம்பாட்டுத் திட்டங்கள் தாமதபடைந்தன.

தொடக்கக் கல்லூரிகளின் உள்கட்டமைப்புகளையும், கற்றலையும் மேம்படுத்தும் நோக்கில் பள்ளிகள் மாற்றியமைக்கப்படவுள்ளன.

“கல்வி அமைச்சு தொடக்கக் கல்லூரிகளுடன் இணைந்து மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது. சில பள்ளிகள் இடம் மாறக்கூடும்,” என்றும் அமைச்சர் சான் சொன்னார்.

அதுகுறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தற்போது ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி, ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி, தெமாசெக் தொடக்கக் கல்லூரி, ஈசூன் இனோவா தொடக்கக் கல்லூரி ஆகியவை மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.

புதுப்பிக்கப்பட்ட இடங்களிலிருந்து இந்த நான்கு தொடக்கக் கல்லூரிகளும் 2028ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலான இட வசதிகள், மாணவர்களின் கலந்துரையாடல்கள், வெவ்வேறு கற்றல் முறைகள் ஆகியவற்றுக்கு ஏதுவாக இருக்கும் நோக்கில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக கிட்டத்தட்ட $570 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சான் தெரிவித்தார்.

ஈசூன் இனோவா தொடக்கக்கல்லூரி 2028 ஜனவரி முதல் செம்பியன்ஸ் வேயில் உள்ள அதன் புதுப்பிக்கப்பட்ட இடத்திற்கு மாறும்.

தெமாசெக் தொடக்கக் கல்லூரி 2027 டிசம்பர் மாதத்தில் பிடோக் சவுத் சாலைக்கு நிரந்தரமாக இடமாறும்.

குறிப்புச் சொற்கள்