பள்ளியில் வழங்கப்படும் உணவு பற்றி சமூக ஊடகத்தில் கருத்துரைத்த மாணவர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஹுவா சொங் கல்வி நிலையம் (HCI) வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) உறுதிசெய்துள்ளது.
மாணவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடு குறித்து பள்ளியில் வழங்கப்பட்ட ஓர் அறிவுரைச் செய்தியும் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அச்செய்தி அவர்களின் நலனுக்காக அனுப்பிவைக்கப்பட்டதே தவிர கருத்துகளை அடக்குவதற்கு அல்ல என்றும் அக்கல்வி நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
மாணவர்கள் அவர்களின் எண்ணங்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள பள்ளியில் ஊடகப் பிரிவு ஒன்று செயல்படுகிறது. பெற்றோருடன் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் அப்பிரிவின் வழியே கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது பாதுகாப்பானது என்பதால், பள்ளி அதனை ஊக்குவிக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்வாண்டு பள்ளி தொடங்கிய முதல் நாளான ஜனவரி 3ஆம் தேதி, ‘ரெட்டிட்’ எனப்படும் சமூக ஊடகத்தில் பள்ளியின் உணவு அங்காடியில் வழங்கப்படும் உணவு வகைகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ‘பென்டோ’ (Bento) உணவுப் பொட்டலங்களின் படங்களும் வெளியிடப்பட்டன.
அங்கு வழங்கப்படும் உணவுகளைச் சிங்கப்பூர் விமான நிலையச் சேவை நிறுவனமான ‘சாட்ஸ்’ (SATS) தயாரித்து விநியோகித்து வருகிறது.
அந்த ரெட்டிட் பதிவில், புதிய உணவுத் தேர்வுகள் பற்றி ஊடகத்திடம் கருத்துகளை வெளியிட்ட ஒன்பது மாணவர்களுக்கு தண்டனைப் புள்ளிகள் (demerit points)விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
‘பள்ளி உணவங்காடியில் எழுந்துள்ள உணவு குறித்த சர்ச்சையில் பங்கேற்பது, படங்களை வெளியிடுவது, செய்தி பரப்புவது போன்றவற்றைத் தவிர்க்குமாறு’ வெளியிடப்பட்ட ஒரு அறிவுரைச் செய்தியின் படமும் வெளியிடப்பட்டது.
“அதன் விளைவுகளை நாங்கள் அறிவோம்” எனவும் மாணவர்கள் ஊடகத்திடம் நேர்காணல் வழங்குவதற்கு பள்ளி, பெற்றோர் ஆகியோரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி இணையத்தில் பரவியது பற்றி அறிந்திருப்பதாகச் சொன்ன பள்ளியின் பேச்சாளர், அவர்களின் நலன் கருதியே அது அனுப்பப்பட்டது என்றார்.
சமூக ஊடகங்களில் முறையாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே அந்த அறிவுரை வெளியிடப்பட்டது என்றதோடு மாணவர்கள் அவர்களின் மேலான கருத்துகளை நேரடியாகப் பள்ளியிடம் தெரிவிப்பது வரவேற்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, ஊடகங்களிடம் மாணவர்கள் தொடர்புகொள்வதை பெற்றோரும் பள்ளியும் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

