பெற்றோருடனான அவசரநேரத் தொடர்புக்காக மாணவர்கள் கைப்பேசிகளை வைத்திருக்கவோ பயன்படுத்தவோ தேவையில்லை என்று கல்வி மற்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணையமைச்சர் ஜாஸ்மின் லாவ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) அவர் இவ்வாறு கூறினார்.
“பெற்றோர் ஏதாவது அவசரத் தகவலைத் தங்கள் பிள்ளைகளிடம் தெரிவிக்க வேண்டியிருந்தால் பள்ளி அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்,” என்றார் துணையமைச்சர். பள்ளி அலுவலகத்தில் உள்ள தொலைபேசி வழியாக மாணவர்களும் தங்கள் பெற்றோரைத் தொடர்புகொள்ள முடியும் என்பதை அவர் சுட்டினார்.
இந்த மாதத்திலிருந்து உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கைப்பேசியைப் பயன்படுத்துவதற்குக் கடுமையான விதிமுறைகள் நடப்புக்கு வந்துள்ளன. அதன்கீழ், வழக்கமான பாட நேரம் மட்டுமன்றி, இடைவேளை, துணைப்பாட நடவடிக்கைகளின்போதும் மாணவர்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்த இயலாது.
இந்நிலையில், அவசர நேரத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு தொடர்புகொள்ள இயலும் என்று செம்பவாங் வெஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போ லி சான் கேள்வி எழுப்பினார்.
துணையமைச்சர் லாவ் அதற்குப் பதிலளித்துப் பேசினார்.
புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் வேளையில் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரிக்காமலிருப்பதை அமைச்சு எவ்வாறு உறுதிசெய்யும் என்றும் திருவாட்டி போ கேட்டிருந்தார்.
கல்வி அமைச்சு பள்ளிகளுக்கு இதன் தொடர்பில் வழிகாட்டிக் குறிப்புகளை வழங்கியுள்ளது என்றார் திருவாட்டி லாவ். தேவைக்கேற்ப ஒழுங்கு நடவடிக்கைக் கொள்கைகளையும் பள்ளி விதிமுறைகளையும் வகுப்பதற்கு அது உதவும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
புதிய கடுமையான விதிமுறைகளோடு உயர்நிலைப் பள்ளிகளில் தற்போது பாட நேரத்தில் திறன்பேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் நடப்பில் உள்ள விதிகளும் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்றார் துணையமைச்சர்.
பள்ளிகளில் கைப்பேசிப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்துப் பெற்றோர் பெரும்பாலும் ஆதரவு தெரிவித்தாலும் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளிகளுக்கு இதன் தொடர்பில் சந்தேகம் இருந்தால் கல்வி அமைச்சு உரிய வழிகாட்டுதலை வழங்குவதாகத் தெரிவித்த திருவாட்டி லாவ், இந்தத் தடை, ஆசிரியர்கள், மாணவர்கள் என இருதரப்பினருக்குமான பள்ளி நேரத்தை மேம்பட்ட அனுபவமாக மாற்றவேண்டும் என்பதில் அமைச்சு கவனமாய் இருப்பதாகவும் கூறினார்.

