கிரீன்டேல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறம் சார்ந்த சமூக ஊடகப் படைப்புகளை உருவாக்குகின்றனர். நெகிழிக் கழிவு முதல் புத்தாக்க முறையில் மூங்கிலைக் கொண்டுசெய்யப்படும் மிதிவண்டிகள் வரை பல்வேறு விவகாரங்களை அவர்கள் ஆராய்கின்றனர்.
உலகில் முன்வைக்கப்படும் தீர்வுகளைக் கண்டறிந்து சொந்தக் கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொள்ள அது அவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக அப்பள்ளியின் புவியியல் பாடப் பிரிவுத் தலைவர் ஏபி கோ தெரிவித்தார்.
“சுற்றுப்புறம் சார்ந்த நடவடிக்கைகள் போதனைகளாக இல்லாமல் நிகழ்காலப் போக்கிற்கு இணையாக இருக்கும்போது, மாணவர்கள் இயல்பாக அவற்றின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர்,” என்றார் அவர்.
பள்ளிக்கு அப்பால், பொங்கோல் சமூகத்தினரிடையே சுற்றுப்புற விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும் மாணவர்கள் கவனம் செலுத்துகின்றனர். புதிய திட்டங்களை வட்டாரவாசிகளிடம் அவர்கள் கொண்டுசெல்கின்றனர்.
அத்தகைய மாணவர்களில் ஒருவர் உயர்நிலை மூன்றில் பயிலும் ஆன்யா அகர்வால். மறுசுழற்சியிலும் பயன்படுத்தப்பட்ட பொருள்களைப் புதியனவாக உருமாற்றுவதிலும் ஈடுபடும்படி குடியிருப்பாளர்களை ஊக்குவிப்பதாக அவர் சொன்னார்.
“பள்ளிக்காக ஒரு பணியைச் செய்வது மட்டுமன்று. சமூகத்தினரை வேறு விதமாக யோசிக்க வைக்கவும் அது உதவுகிறது. மற்றவர்களும் சுற்றுப்புறம் குறித்து மேலும் விழிப்புடன் இருப்பதைப் பார்க்கும்போது நம்முடைய முயற்சி அர்த்தமுள்ளதாகிறது,” என்றார் 15 வயது ஆன்யா.
இவ்வேளையில் யுயிங் உயர்நிலைப் பள்ளி, நீடித்த நிலைத்தன்மை சார்ந்த அம்சங்களைப் பல்வேறு பாடங்களைக் கொண்டு இணைக்கிறது. சத்துணவு, உணவு அறிவியல், மொழிகள், புவியியல் முதலியவை அந்தப் பாடங்களில் சில.
உணவுப் பாதுகாப்புப் போன்ற உலகின் தற்போதைய பிரச்சினைகளை ஆராயும் திட்டங்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசியில் கவனம் செலுத்தும் பாடத்திட்டத்தை உயர்நிலை ஒன்றில் பயிலும் அனைவருக்கும் பள்ளி வழங்குகிறது. நெல் பயிரிடுவதற்கென நிலப்பகுதி, செங்குத்துப் பண்ணை, நீர்முறை வேளாண் கட்டமைப்புகள் முதலியவை பள்ளியில் உள்ளன. மாணவர்கள் அங்கு மண்ணைப் பண்படுத்தி, விதைநெல்லைப் பயிரிட்டு அறுவடை செய்யும்வரை அனைத்தையும் நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
அத்தகைய அனுபவத்தைப் பெற்ற மாணவர்களில் ஒருவர் 16 வயது மோன் மியாட் து. ஐந்தரை மாதத் திட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.
“பெரும்பாலானவர்கள் மெத்தனமாக எடுத்துக்கொள்ளும் அத்தியாவசிய உணவுப் பொருள் அரிசி. ஆனால் நெற்பயிரை அறுவடை செய்வதற்கு எவ்வளவு முயற்சிகளும் வளங்களும் தேவை என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்றார் அவர்.
“செடிகளைப் பராமரித்துப் பார்த்துக்கொண்டது எனக்குப் பொறுமையையும் பொறுப்பையும் கற்றுக்கொடுத்தது,” என்று மோன் மியாட் சொன்னார்.
“இத்தகைய அணுகுமுறையின் மூலம் மாணவர்கள் மேலும் அர்த்தமுள்ள வகையில் கற்கமுடியும். சிக்கலான சுற்றுப்புறச் சவால்களைச் சமாளிப்பதில் எவ்வாறு பல்வேறு பாடங்கள் உதவுகின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்,” என்றார் யுயிங் உயர்நிலைப் பள்ளி முதல்வர் சோங் ஜேக் ஷெங்.
செயின்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப் பள்ளி, உயர்நிலை இரண்டில் பயிலும் மாணவர்களுக்காகச் சிறப்புத் திட்டமொன்றை வைத்துள்ளது. ‘உங்கள் அன்புக்குரியவருடன் ஆற்றுக் கல்வி’ எனும் அந்தத் திட்டத்தில் மாணவர்கள் அவர்களின் குடும்பத்தாரை காலாங் ஆற்றுக்குக் கூட்டிச்செல்வர். அங்குள்ள சுற்றுச்சூழல் குறித்தும் நீடித்த நிலைத்தன்மை சார்ந்த அம்சங்கள் பற்றியும் கற்றுக்கொள்ள அது வாய்ப்பளிக்கும்.
“பிள்ளைகளின் கற்றல் அனுபவத்தில் பெற்றோரும் பங்கெடுக்கும்போது தாக்கம் அதிகரிக்கும். சுற்றுப்புறத்தைப் பேணுவது குடும்பங்களின் பொறுப்பு எனும் வலுவான கருத்தும் உருவாகும்,” என்றார் பள்ளி முதல்வர் லீ ஹான் ஹுவா.
அந்தப் பள்ளி மாணவர் இக்னேஷியஸ் டாங், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல திட்டங்களை முன்னெடுத்தார். குப்பைகளைக் குறைப்பது, எரிசக்தியைச் சேமிப்பது, விழாக்கால அன்பளிப்புப் பைகளை மீண்டும் பயன்படுத்துவது முதலியவை அவற்றுள் சில.

