பள்ளி வளாகத்தில் மின்சிகரெட்டை மறைத்து பயன்படுத்தும் வழிகளை மாணவர்கள் உருவாக்குகின்றனர்

மின்சிகரெட்டை உள்ளாடைகளில் மறைத்த மாணவர்கள்

2 mins read
d8c9c50b-cf7b-4e1a-bcba-870bf605920c
தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் மின்சிகரெட்டுகளைத் திருட்டுத்தனமாகக் கொண்டுவரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் மின்சிகரெட்டுகளைத் திருட்டுத்தனமாகக் கொண்டுவரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவற்றை எளிதில் கழற்றி மறைக்க முடிவதால் பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களால் எளிதாகக் கொண்டு வர முடிவதாக அவர்கள் கூறினர்.

மாணவர்களிடையே புகைப்பிடிப்பதைவிட மின்சிகரெட் பயன்பாட்டைக் கண்டுபிடிப்பது இன்னும் சிரமம் என்ற ஆசிரியர்கள் 2021ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பிரச்சினை தலைதூக்கியதாகக் குறிப்பிட்டனர்.

மின்சிகரெட்டை வைத்திருந்தற்காவும் அதைப் பயன்படுத்தியதற்காகவும் பிடிப்பட்ட மாணவர்கள் தொடர்புடைய சம்பவங்கள் கடந்த ஆண்டு 2,000. 2022ஆம் ஆண்டில் அது 800ஆகவும் 2023ஆம் ஆண்டு அது 900ஆகவும் இருந்தது.

சுகாதார, அறிவியல் ஆணையம் முன்னெடுத்த அமலாக்க நடவடிக்கைகளால் அதிகமான மாணவர்கள் பிடிபட்டதாகக் கல்வியமைச்சு சொன்னது.

இருப்பினும், மின்சிகரெட்டுகளை மறைக்கவும் அவற்றைப் பகிரவும் புது வழிகளை மாணவர்கள் கண்டுபிடிப்பதால் இன்னும் பல சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படாமல் போயிருக்கலாம் என்று ஆசிரியர்கள் கருதினர்.

ஆசிரியர்களால் மாணவர்களின் உடலை முழுமையாகச் சோதிக்க முடியாது என்பதை அறிந்து ஒருசில மாணவர்கள் தங்கள் உள்ளாடைகளில் மின்சிகரெட்டுகளை மறைத்துவைப்பதாகவும் ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

மின்சிகரெட்டை சக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான வழிகளையும் மாணவர்கள் உருவாக்குவதாக அவர் சொன்னார்.

“ஒரு முறை, பள்ளிக் கழிவறையில் உள்ள ‘ரோல் ஹொல்டர்’ (roll holder) கருவியில் மாணவர்கள் மின்சிகரெட்டை ஒளித்து வைத்ததைக் கண்டுபிடித்தோம். பள்ளி நேரங்களில் யார் எப்போது வந்து அதைப் பயன்படுத்துவது என்ற ஒரு வழிமுறையையும் அவர்கள் உருவாக்கி வைத்திருந்தனர்,” என்றார் ஓர் ஆசிரியர்.

2023ஆம் ஆண்டிலிருந்து கல்வியமைச்சு சுகாதார மேம்பாட்டு வாரியத்துடனும் சுகாதார அறிவியல் ஆணையத்துடனும் இணைந்து மின்சிகரெட் குறித்த அறிவுரைகளைப் பெற்றோருக்கு வழங்குகிறது.

மின்சிகரெட், போதைப் பொருள் ஆகியவற்றின் பயன்பாட்டைத் தடுப்பதில் பெற்றோர் முக்கிய பங்கு வகிப்பதாகக் கல்வியமைச்சு சொன்னது.

குறிப்புச் சொற்கள்