தவறவிட்ட பணப்பையை அப்படியே திரும்பக் கொடுத்த பீட்டி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை டிக்டாக் பயனீட்டாளர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
பயனீட்டாளரின் அடையாள அட்டையில் உள்ள முகவரியைக் கொண்டு மாணவர்கள் அவரின் வீட்டுக்கே சென்றுவிட்டனர்.
டிக்டாக் பயனீட்டாளர் சமூக ஊடகத்தில் பதிவேற்றிய காணொளியில் மூன்று மாணவர்கள் அவரின் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருப்பதைக் காண முடிகிறது.
அவர்கள் கதவின் அழைப்பு மணியை ஒலித்தும் கதவைப் பலமுறை தட்டியும் யாரும் திறக்கவில்லை.
வாசலில் இருந்த கண்காணிப்புக் கேமராவைக் கண்ட மாணவர்களில் ஒருவர் அதன் வழியாகத் தொலைக்கப்பட்ட பணப்பையைக் காண்பித்தார்.
சில நொடிகள் கழித்து, தொலைத்தொடர்பு வழியாக மாணவரிடம் யாரோ பேசினர்.
பேருந்து எண் 129இல் சில நாள்களுக்குமுன் பணப்பையைக் கண்டெடுத்ததை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
பின்னர் சமூக ஊடகத்தில் பதிவேற்றிய பதிவில் தொலைந்த பணப்பையை அதற்குள் இருக்கும் பொருள்களுடன் அப்படியே திரும்பக் கொடுத்ததற்காக நன்றி கூறிய டிக்டாக் பயனீட்டாளர், அவர்களின் நேர்மையையும் பரிவையும் பாராட்டினார்.
மாணவர்களின் செயல் பொறுப்புமிக்க நடத்தையின் உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


