புத்தாண்டில் பள்ளிகள் திறக்கும்போது தொற்றுச் சம்பவங்கள் சற்று தலைதூக்குவதற்கான சாத்தியம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தொற்றுநோய் தடுப்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்தில் பலதுறை மருந்தகங்களில் கடுமையான சுவாசத் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தன.
ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதி வரை 3,392 சுவாசத் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அதற்கு முந்திய இரண்டு மாதங்களில் அந்த எண்ணிக்கை 2,470ஆக இருந்தது.
எனவே, முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்தும்படி அமைப்பின் காற்று, நீர்த்துளி மூலம் தொற்று பரவுவதைக் கண்காணிக்கும் பிரிவின் இயக்குநர் டாக்டர் ஸுபாய்டா தெரிவித்தார்.
தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், சில பெற்றோர் இன்னமும் தவறான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அடிக்கடி கைகளைக் கழுவுவது, 60 விழுக்காடு அல்கஹால் (alcohol) திரவம் கொண்ட தாள்களைப் (wipes) பயன்படுத்துவது, குறைந்தது 20 விநாடிகளுக்குக் கைகளைச் சவர்க்காரம் பயன்படுத்தி கழுவுவது போன்ற பழக்கங்களைப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும்படி டாக்டர் ஸுபாய்டா அறிவுறுத்தினார்.
கைகளை நன்றாகக் கழுவும்போது விரல் இடுக்குகளும் தூய்மையாவதாக அவர் குறிப்பிட்டார்.
கைகளைக் கழுவியவுடன் அவற்றைத் துடைத்து காயவைப்பதும் முக்கியம். குறிப்பாக, சிறு பிள்ளைகளிடையே கை, கால், வாய் புண்கள் எளிதில் பரவக்கூடியவை என்பதால் அத்தகைய வழிமுறைகள் அவசியம் என்றார் டாக்டர் ஸுபாய்டா.
தொடர்புடைய செய்திகள்
காய்ச்சல் நின்றுவிட்டாலும் அறிகுறிகள் இருந்தால் ஒருவரிடமிருந்து கிருமி பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காற்று மூலமும் சிறு நீர்த்துளிகள் மூலமும் கிருமிகள் பரவக்கூடும் என்பதால் தும்மும்போதும் இறுமும்போதும் தொற்று ஏற்படக்கூடும் என்று டாக்டர் ஸுபாய்டா விளக்கம் அளித்தார்.
எனவே காய்ச்சலிலிருந்து மீண்டு வந்தவர்கள் கிருமிகள் பரவாமல் இருக்க தொடர்ந்து முகக்கவசங்களை அணியும்படி அவர் அறிவுறுத்தினார்.

