சிங்கப்பூர் பள்ளி மாணவர்கள் உணவு அல்லது கல்விச் சாதனங்களை வாங்கும்போது அதற்கு மின்னிலக்கம் வாயிலாக பணம் செலுத்தும் இ-பேமெண்ட் (e-payment) முறையைப் பின்பற்றுகிறார்கள்.
சிங்கப்பூர் முழுவதும் ஏறத்தாழ 230,000 மாணவர்களுக்குப் பலனளிக்கிறது அந்த முறை.
விரைவாகவும் எளிதாகவும் கட்டணத்தைச் செலுத்திவிட முடிகிறது என்பதால் தாங்கள் இ-பேமெண்ட் முறையைத் தேர்ந்து எடுப்பதாக மாணவர்களும் கடைக்காரர்களும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தனர்.
பள்ளிப் பாட வகுப்புகளுக்கு இடையே 30 நிமிட ஓய்வுநேரத்தில் விரைவாகப் பணம் செலுத்த அது உதவுவதாக அவர்கள் கூறினர்.
இ-பேமெண்ட் முறையைப் பின்பற்றும் மாணவர்களில் ஒருவர் மேகன் ஹான்.
பள்ளியின் உணவகங்களில் வரிசைகளை இ-பேமெண்ட் குறைப்பதாகக் கூறினார், தோ பாயோவில் உள்ள பெய் சுன் பொதுப் பள்ளி தொடக்கநிலை 5ல் பயிலும் அந்த மாணவர்.
அவரைப் போலவே, ஏண்டர்சன் உயர்நிலைப் பள்ளியில் உணவகம் நடத்தி வரும் கெய்த் லோ, 51, என்பவரும் அந்தப் பணம் செலுத்தும் முறை எளிதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பணம் செலுத்தும் முறையால் நேரம் மிச்சமாகிறது என்று கூறிய அவர், மாணவர்களுக்குச் சாப்பிட நேரம் தேவைப்படும் என்பதால் ஓய்வுநேரத்தின் முதல் 10 நிமிடங்களிலேயே பெரும்பாலான சாப்பாடுகளை அவர்களுக்கு வழங்கிவிட முடிகிறது என்றார்.
“ரொக்கப் பணம் அல்லது சில்லறைக் காசுகளை வாங்கும்போது அதனை எண்ணி, சரிபார்க்க நேரம் தேவைப்படும். அதற்கு பத்து அல்லது 30 நொடிகள் தேவைப்படலாம் என்று எடுத்துக்கொண்டாலும் அதுவும் நேரம்தானே.
“அதுவே மின்னிலக்கமாக இருந்தால், மாணவர்கள் விரைவாக சாதனத்தில் ஸ்கேன் செய்து விரைவாகப் பணத்தைச் செலுத்திவிட முடிகிறது,” என்று திரு லோ தெரிவித்தார்.
மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட உணவுப் பொருள்களை மாணவர்கள் வாங்கும்போது அதற்கான கட்டணத்தை எளிதாகக் கூட்ட சாதனங்கள் உதவுவதாகவும் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.
பள்ளிகளில் இ-பேமெண்ட் முறையைக் கடைப்பிடிக்கும் முயற்சி ‘பிஓஎஸ்பி ஸ்மார்ட் படி’ (POSB Smart Buddy) திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
மின்னிலக்க வடிவில் பணத்தைச் செலுத்தும் இந்தப் புதிய முறை முதன்முதலாக 2017ஆம் ஆண்டு 19 தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் கண்டது.
அதிகமான பள்ளிக் குழந்தைகள் மின்னிலக்கப் பணம் செலுத்துதல் பற்றித் தெரிந்துகொள்வதோடு நிதி தொடர்பான கல்வி அறிவையும் பெறுவது திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தை எல்லா தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்லூரிகளுக்கும் 2025ஆம் ஆண்டுக்குள் விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் பிஓஎஸ்பி வங்கியும் கல்வி அமைச்சும் கடந்த 2022ஆம் ஆண்டு கையெழுத்திட்டன.

