சிட்டி ஸ்குவேர் குறுங்காடு நகர்ப்புற வெப்பநிலையை 5 டிகிரி வரை குறைக்கும்: ஆய்வு

சிட்டி ஸ்குவேர் குறுங்காடு நகர்ப்புற வெப்பநிலையை 5 டிகிரி வரை குறைக்கும்: ஆய்வு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Mar 2026 - 1:10 pm

2 mins read

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இருக்கும் ‘சிட்டி ஸ்குவேர் மால்’ கடைத்தொகுதிக்கு வெளியே அமைந்துள்ள குறுங்காடு தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பசுமைப் புகலிடம், அதைச் சுற்றியுள்ள நகர்ப்புறப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைக் குறைக்க உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், உள்ளூர்ப் பறவைகளுக்கு வாழ்விடமாகவும் இது விளங்குகிறது.

260 சதுர மீட்டர் (அரைக் கூடைப்பந்துத் திடல் அளவு) பரப்பளவில் இருந்த இந்தக் குறுங்காடு, இவ்வாண்டு ஜனவரியில் இரு மடங்காக விரிவுபடுத்தப்பட்டது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வல்லுநர்களுடன் இணைந்து சிட்டி டெவலப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் உருவாக்கிய ‘சிடிஎல் குறுங்காடு’, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

அதற்கு தேசிய பூங்காக் கழகமும் ஆதரவு வழங்கியது.

ஓராண்டு காலம் நடத்திய ஆய்வின் முடிவுகளை, சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியில் உள்ள சிங்கப்பூர் நீடித்த நிலைத்தன்மைக் கழகத்தில் மார்ச் 20ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கருத்தரங்கில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமர்ப்பித்தனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட அந்த ஆய்வில், குறுங்காட்டின் எல்லையிலிருந்து 2 மீட்டர் தொலைவிற்குள் உள்ள பகுதிகளின் வெப்பநிலை அதைச் சுற்றியுள்ள நகர்ப்புற மேற்பரப்புகளைக் காட்டிலும் குறைவாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

ஆய்வை வழிநடத்திய சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஏட்ரியன் லூ கூறுகையில், “இந்தக் குறுங்காடு சிறியதாக இருந்தாலும், நகர்ப்புறத்தில் ஒரு பசுமையான சரணாலயமாகச் செயல்படுகிறது. காடுகள் வெப்பநிலையைக் கணிசமாகக் குறைக்கும் என்பதற்கு இது சிறந்த சான்று,” எனத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
காடுதேசிய பூங்காக் கழகம்லிட்டில் இந்தியா