மரபணுக் காரணங்கள் அல்லது புற்றுநோய்க்கு முந்தைய நிலைகளால், புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள 1,000 பேர் சம்பந்தப்பட்ட மருத்துவ ஆய்வு ஒன்று இவ்வாண்டின் பிற்பாதியில் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
வெவ்வேறு வகையான புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறியும் சோதனைகளின் பயன்பாட்டை மதிப்பீடு செய்ய அந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையத்தைச் சேர்ந்த குழு ஒன்று அந்த ஆய்வை வழிநடத்தும்.
புற்றுநோய்த் தடுப்பு, பரிசோதனை, முன்கூட்டியே கண்டறிதலுக்கான ஆய்வுக் கழகம் (ரைஸ்) தொடங்கிய இரண்டு ஆய்வுகளில் ஒன்று அது. சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியும் இணைந்து ‘ரைஸ்’ ஆய்வுக் கழகத்தை நடத்திவருகின்றன.
வெவ்வேறு வகையான புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறியும் சோதனைகள் பங்கேற்பாளர்களிடம் ஆரம்பக்கட்ட புற்றுநோய்களை வெற்றிகரமாகக் கண்டறிகின்றனவா என்பதை அந்த ஆய்வு தீர்மானிக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 பங்கேற்பாளர்களும் சிங்கப்பூரின் தேசிய சுகாதாரத் தரவுத்தளத்துடன் இணைக்கப்படுவார்கள். அவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதையும் நோய்வாய்ப்பட்ட பிறகு எத்தனை ஆண்டுகள் உயிர்வாழ்கின்றனர் என்பதையும் கண்டறிய, அவர்கள் காலப்போக்கில் கண்காணிக்கப்படுவார்கள்.
புதிதாக உருவாக்கப்பட்டுவரும் இப்புற்றுநோய்ப் பரிசோதனை தொழில்நுட்பம், தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், ஒட்டுமொத்த மக்கள்தொகையின் சுகாதார நிலையை அது உண்மையிலேயே மேம்படுத்துகிறதா என்பதற்கான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், “வெவ்வேறு வகையான புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறியும் சோதனைகள் தவறான முடிவுகளை வழங்குவது அரிது,” என்று சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையத்தில் மருத்துவப் புற்றுநோயியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் ரவிந்தரன் கனேஸ்வரன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
புற்றுநோய் எங்கிருந்து தொடங்கியது என்பதையும் அவற்றால் கணிக்கமுடியும் என்றார் அவர். இருப்பினும், இவற்றில் முக்கியக் கட்டுப்பாடுகள் உள்ளதாகச் சொன்னார், ‘ரைஸ்’ நிறுவனத்தின் இணை இயக்குநருமான பேராசிரியர் ரவிந்தரன்.

