பூமியின் வெப்பத்தைப் பயன்படுத்தும் சாத்தியம் குறித்த ஆய்வு சூடுபிடித்துள்ளது. அவ்வகையில், புவிவெப்ப ஆற்றல் அமைப்புகளை நிறுவுவது குறித்த ஒரு சாத்தியக்கூறு ஆய்வைச் சிங்கப்பூர் மேற்கொள்ளவுள்ளது.
ஹைட்ரஜன், கரிமப் பிடிப்பு போன்ற வழிகளில் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான வழிகளை சிங்கப்பூர் ஆராய்ந்து வரும் வேளையில் இது இடம்பெறவுள்ளது.
சிங்கப்பூரில் புவிவெப்ப ஆற்றல் அமைப்புகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கான ஒரு விரிவான ஆய்வை நடத்துவதற்கான முன்மொழிவுக் கோரிக்கையை வெளியிடப்போவதாக எரிசக்திச் சந்தை ஆணையம், செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 28) தெரிவித்தது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான புவிவெப்ப ஆற்றல், பூமியின் மேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 2,900 கி.மீ. ஆழத்தில் உள்ள அதன் மையப்பகுதியிலிருந்து வெப்பத்தைப் பெறுகிறது.
வழக்கமான புவிவெப்ப ஆற்றல் அமைப்புகள், பொதுவாக இயற்கையாகவே அதிக வெப்பநிலை உள்ள இடங்கள், நீர்ப்படுகைகள், நீர் ஊடுருவக்கூடிய பாறை அமைப்புகளில் நிறுவப்படுகின்றன. நீர்ப்படுகைகள் என்பது நீரைச் சேமித்து அனுப்பக்கூடிய, நிலத்தடியில் உள்ள நீர் தாங்கும் பாறை, மணல் அல்லது சரளைக்கற்களின் அடுக்குகளைக் குறிக்கிறது.
இந்த அமைப்புகள், பொதுவாக எரிமலை மண்டலங்கள் போன்ற புவியியல் ரீதியாகச் செயல்படும் பகுதிகளில் காணப்படுகின்றன. எனவே சிங்கப்பூரில் அத்தகைய வளங்கள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
இருப்பினும், புவிவெப்பத் தொழில்நுட்பங்களில் அண்மைய உலகளாவிய முன்னேற்றங்கள், மின்சாரம், வெப்பமூட்டல், குளிரூட்டல் தேவைகளுக்காக நிலத்தடி வெப்பத்தைப் பயன்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று ஆணையம் விளக்கியது.
சிங்கப்பூரில் அடுத்த தலைமுறை புவிவெப்ப அமைப்புகளை நிறுவுவதற்கான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் மற்றும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை இந்த ஆய்வு மதிப்பிடும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், நியமிக்கப்பட்ட ஆலோசகருக்கு, மேலதிக ஆய்வுக்கான பகுதிகளைக் கண்டறிந்து, சாத்தியமான புவிவெப்பத் திட்டங்களுக்கான கொள்கைக் கட்டமைப்புகளைப் பரிந்துரைக்கும் பணியும் வழங்கப்படும் என்றும் அது கூறியது.
சிங்கப்பூரில் புவிவெப்ப ஆற்றல் இருப்பதற்கு சாத்தியமுள்ள பகுதிகளைக் கண்டறிவதற்காக, 2024ஆம் ஆண்டில் எரிசக்திச் சந்தை ஆணையத்தால் தொடங்கப்பட்ட, நாடு தழுவிய, தொடர்ந்து நடைபெற்று வரும் ஊடுருவாத புவி இயற்பியல் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்தக் கணக்கெடுப்பும் ஆய்வும் சிங்கப்பூரின் புவிவெப்ப ஆற்றல் சாத்தியக்கூறுகள் குறித்த ஒரு முழுமையான மதிப்பீட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று ஆணையம் குறிப்பிட்டது.

