சிங்கப்பூரர்கள் பொதுவாக வேலையிடத்தில் குறைவான இனப் பாகுபாட்டுக்கு ஆளாகின்றனர். இருந்தபோதும், சிங்கப்பூரில் பெரும்பான்மையாக உள்ள சீன இனக்குழுவைக் காட்டிலும் சிறுபான்மையினர் இன ரீதியான பாகுபாடுகளை அதிகம் உணர்வதாகக் கொள்கை ஆய்வுக் கழகம் வெளியிட்ட அண்மைய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
இன, சமய நல்லிணக்க நலன்களை இடித்துரைக்கும் அரசுசாரா அமைப்பான ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’யுடன் நடத்தப்பட்ட, 2024ஆம் ஆண்டுக்கான இந்த ஆய்வின்படி, 18.4 விழுக்காட்டு மலாய் இனத்தவரும் 16.7 விழுக்காட்டு இந்திய இனத்தவரும் வேலைக்காக விண்ணப்பிக்கும்போதும் பதவி உயர்வுக்கான பரீசிலனையின்போதும் இனப்பாகுப்பாட்டைச் சந்திப்பதாக உணர்வதாய்க் கூறியுள்ளனர்.
இத்தகைய பிரிவினரின் விழுக்காடு, முந்தைய ஆண்டு பதிவான விழுக்காடுகளைக் காட்டிலும் குறைவு. 2018, 2013 ஆண்டுகளில் வெளிவந்த ஆய்வறிக்கைகளில் மலாய்க்காரர்களிலும் இந்தியர்களிலும் ஏறத்தாழ கால் பங்கிக்கு அதிகமானோர் வேலைச்சூழலில் இவ்வாறு பாகுபாட்டை உணர்வதாகத் தெரிவித்திருந்தனர்.
ஒவ்வோர் அறிக்கையுமே 4,000க்கும் அதிகமான சிங்கப்பூரர்களின் பதில்களை ஆராய்ந்துள்ளன.
சீன இனத்தவரைப் பொறுத்தவரையில் 3.7 விழுக்காடு மட்டுமே வேலைக்காக விண்ணப்பிக்கும்போதும் பதவி உயர்வுக்கான பரீசிலனையின்போதும் பாகுபாட்டை உணர்வதாகக் கூறினர். தற்போதைய விழுக்காடு, 2013ல் பதிவான 5.7 விழுக்காட்டையும் 2018ல் பதிவான 4.1 விழுக்காட்டையும் விட குறைவு.
வேலையிடத்தில் பொதுவான பாகுபாடு
2018 ஆய்வுக்குப் பிறகு, பாகுபாடு எதிர்நோக்குவோரின் விழுக்காடு ஒட்டுமொத்தமாகக் குறைந்துள்ளது. வேலையிடத்தில் சீன இனத்தவர் பொதுவாக இன பாகுபாட்டைக் குறைவாக உணர்வதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
கிட்டத்தட்ட ஆறு விழுக்காடு சீன சிங்கப்பூரர்கள், வேலையிடத்தில் சில சமயங்களில் அல்லது அடிக்கடி அல்லது மிக அதிகமாக இனப்பாகுபாட்டை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மலாய் இனத்தவரில் 23.7 விழுக்காடும் இந்திய இனத்தவரில் 23.4 விழுக்காடு மற்ற இனத்தோரில் 20.6 விழுக்காடும் இவ்வாறு உணர்வதாக அண்மைய அறிக்கையில் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விகிதங்கள், 2018ல் பதிவானவற்றைக் காட்டிலும் குறைவு. 2018ன் புள்ளிவிவரங்கள்படி, சீனர்களில் 10.7 விழுக்காட்டினரும் மலாய்க்காரர்களில் 35.3 விழுக்காட்டினரும் இவ்வாறு உணர்வதாகக் கூறினர். ஒப்புநோக்க, இதே உணர்வை 35.3 விழுக்காடு மலாய் இனத்தவரும் 32.2 விழுக்காடு இந்தியர்களும் 17.7 விழுக்காடு பிற இனத்தவரும் உணர்ந்தனர்.
வேலையிடத்தில், பாகுபாடு தொடர்பான ஒட்டுமொத்த உணர்வுமே குறைந்திருப்பதாக பிப்ரவரி 3ஆம் தேதி வெளியீடு கண்ட இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
இதற்கிடையே, 2024ல் வேலை கிடைப்பதிலும் பதவி உயர்வு பெறுவதிலும் பாகுபாடு எதிர்நோக்குவதை ஏழு விழுக்காட்டினர் உணர்வதாகவும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. 2018ல் இந்த விழுக்காடு 9.3 ஆக உள்ளது.
மொழிப்புழக்கத்தால் பாகுபாடு
வேலையிடத்தில் அதிக பாகுபாட்டை எதிர்நோக்குவோர், தங்களுக்குப் புரியாத மொழிப்புழக்கத்தால் வேலைச்சூழலில் புறந்தள்ளப்படுவதை உணர்வதாகக் கூறினர். இப்பிரிவினரின் விழுக்காடு, 57.7.
இதற்கிடையே, பதவி உயர்வு பெறுவோருக்கு அவர்கள் தகுதியைக் காட்டிலும் இனம் பார்க்கப்படுவதாக ஆய்வில் பதிலளித்த 47.7 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.
வேலையிட பாகுபாடு தொடர்ச்சியாக ஏற்படும் ஒரு விவகாரம் என ஒன்பீப்பள்.எஸ்ஜி அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது அந்த அமைப்பின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த லெனர்ட் லிம் கூறினார்.
“கருத்தாய்வு கூறியபடி, ஊழியர்களில் பலர், குறிப்பாக சிறுபான்மையினர், வேலையிடத்தில் பாகுபாட்டை உணர்கின்றனர். இன ரீதியான கேலி கிண்டல்களுக்கு ஆளாகின்றனர்,” என்று கூறிய திரு லிம், வேலையிட பன்முகத்தன்மை குறித்த தம் அமைப்பின் உத்திகளையும் விவரித்தார்.