மீட்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் மீன்கள் குறித்து ஆய்வு: தேசியப் பூங்காக் கழகம்

மீட்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் மீன்கள் குறித்து ஆய்வு: தேசியப் பூங்காக் கழகம்

2 mins read
f6967884-e4e2-4b76-9bdc-e76175d50859
பிடோக் பாலத்தில் ஜூன் 30ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் வெள்ளைப் புள்ளி ராபிட் மீன் சிக்கியது. அங்கு வாழும் 40 வகையான மீன்களில் இதுவும் ஒன்று. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தேசிய பூங்காக் கழகம், மீட்கப்பட்ட நிலப்பகுதிகளின் கடலோரங்களில் வாழும் கடல்மீன் இனங்கள் குறித்து ஆய்வு நடத்த பெரிய அளவில் திட்டமிட்டுள்ளது.

அத்தகைய வாழ்விடங்களைச் சிறப்பாக வடிவமைக்கவும் நிர்வகிக்கவும் அந்த ஆய்வு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கை ஒட்டிய கடல்வாழ் மீன்கள் குறித்து இதுவரை அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கழகத்தின் ஆய்வு பல இடைவெளிகளை நிரப்ப உதவும் என்று மீன்வள ஆய்வாளர்களும் கடலியல் ஆர்வலர்களும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளேட்டிடம் தெரிவித்துள்ளனர்.

லாங் ஐலண்ட் நில மீட்புத் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கவுள்ள நிலையில் இத்தகவல் வெளியாகி உள்ளது.

“லாங் ஐலண்ட் தீவுத் திட்டத்தின் பிந்திய கட்டங்களில் பிடோக் படகுத்துறை போன்றவற்றை எதிர்காலத்தில் திட்டமிட்டு நிர்வகிக்க இது உதவும்,” என்று மீன்வள உயிரியலாளர் ஜெஃப்ரி குவிக் தெரிவித்தார்.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் உட்பட மீட்கப்பட்ட கடலோரங்களில் வாழும் மீன் இனங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வு, எதிர்காலக் கடலோர வாழ்விடங்களின் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் தேவைகளுக்கும் சிறந்த முறையில் துணை புரிய உதவும் என்று கழகத்தின் தேசிய பல்லுயிர்ப்பு நிலையத்தின் குழும இயக்குநர் கரீன் டுன் கூறினார்.

2025ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட ஆய்விற்காக சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (எஸ்ஐடி), சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல்மீன் ஆய்வாளர்களுடன் கழகம் பேச்சு நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நீடிக்கும் இந்த ஆய்வு, மீன்களின் சமூகக் கட்டமைப்பு, வளர்ந்த, இளம் மீன்களின் பரவல், உள்நாட்டைச் சாராத பிற மீன் இனங்களின் தாக்கம் குறித்து ஆராயப்படும்.

ஆய்வு தொடங்கும் தேதியைக் கழகம் அறிவிக்கவில்லை.

மீன்களின் அளவு குறித்த தகவல்கள் பல வகையில் உதவும் என்று எஸ்ஐடி பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் குவிக் குறிப்பிட்டார்.

“பல நாடுகளில் பொழுதுபோக்குக்கும், வணிகம் சார்ந்த மீன்பிடித்தலை உறுதிசெய்யவும், இயற்கை மீன் வளத்தை நிர்வகிக்கவும் மீன்களின் அளவு மற்றும் பிடிக்கும் அளவுகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் மீன்கள் பற்றிய ஆய்வுகள் உதவியிருக்கின்றன,” என்று அவர் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட லாங் ஐலண்ட் தீவு சுற்றுச்சூழல் ஆய்வில், பீடோக் படகுத்துறையில் உள்ள கடல்வாழ் உயிரினங்களின் பல்லுயிர்களின் தன்மை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சில உள்ளூர் தூண்டில் மீன்பிடிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிப்பாளர்களின் கவலைகளுக்குப் பதிலளித்த நில மீட்புப் பணிகளைக் கண்காணிக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), லாங் ஐலண்ட் தீவு ஆயத்தப் பணிகளுக்கான சுற்றுச்சூழல் ஆய்வு, பவளப்பாறைகள் போன்ற இடங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் அழுத்தங்கள் மீன் இனங்களைப் பாதிக்கலாம் என்பதை அங்கீகரிப்பதாகத் தெரிவித்தது.

“மீன்களின் இயல்பான நடமாடும் தன்மை, அவற்றுக்கான வாழிடங்கள் தொடர்ந்து கிடைப்பதைக் கருத்தில்கொண்டு, மீன்கள் மீதான தாக்கம் தற்காலிகமானதாகவும் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே உரியதாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிலமீட்புக்கு நிர்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தர இலக்குகளுக்கு உட்பட்டதே ஆகும்,” என்று வீவக மேலும் விளக்கியது.

குறிப்புச் சொற்கள்