தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாத்தோக் வனத்தின் ஒரு பகுதியைத் தக்கவைக்க ஆய்வு

2 mins read
b40bf940-aaa9-4454-baa8-b8fc611ce188
புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள 5.5 ஹெக்டர் பரப்பளவு நிலம், புதிய குடியிருப்புப் பேட்டைக்கு எதிர்காலத்தில் வழிவிடவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் பாத்தோக் ஹோம்டீம் என்எஸ் (Home Team NS) பொழுதுபோக்கு மன்றத்தில் அமைந்துள்ள ஒரு சிறு வனப்பகுதி குடியிருப்புப் பேட்டையை உருவாக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வனப்பகுதியில் உள்ள ‘புல்புல்’ போன்ற அரியவகை வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்க குறிப்பிட்ட ஒரு பகுதியைப் பாதுகாப்பதற்கான புதிய ஆய்வறிக்கை மே 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.

1960களில் குறிப்பிட்ட அந்த நிலம் சுத்தம் செய்யப்பட்டபோது ஒரு சிறு வனப்பகுதி அங்கு முளைத்தது.

அதில் 0.48 ஹெக்டர் பரப்பளவை அதாவது காற்பந்துத் திடலைவிட சிறிய பரப்பளவைப் பாதுகாப்பதற்கான பரிந்துரை ஆய்வறிக்கையில் இடம்பெற்றது. அது 5.5 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதியில் கிட்டத்தட்ட 9 விழுக்காடு.

புக்கிட் பாத்தோக் கார் பயிற்சி நிலையம், கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களிலும் புதிய குடியிருப்புப் பேட்டை வரவிருக்கிறது.

புக்கிட் பாத்தோக் சாலை சந்திப்பிலிருந்து புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5 வரை உள்ள 14.5 ஹெக்டர் பரப்பளவிலான நிலம் திட்டமிடப்பட்ட குடியிருப்புப் பேட்டையைக் கட்ட 2014ஆம் ஆண்டிலிருந்து ஒதுக்கப்பட்டது.

புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் திட்டமிடலில் வழிகாட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தேசியப் பூங்காக் கழகம் சுற்றுப்புறத்துக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிட பணியமர்த்தப்பட்டது.

சிங்கப்பூரின் மேற்கு வனப்பகுதிகளிலிருந்து மத்திய வனப்பகுதிக்குச் செல்லும் வனவிலங்குகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி ஒரு படிக்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருகிவரும் அத்திமரம் உள்பட 20 தாவர இனங்களில் 11 வகை பாதுகாக்கப்படும்.

2024ஆம் ஆண்டு வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 117 விலங்கினங்கள் கண்டறியப்பட்டன.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையைப் பொதுமக்கள் பார்வையிடலாம். அதுகுறித்த தங்கள் கருத்துகளை ஜூன் 15ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.

புதிய குடியிருப்புப் பேட்டைக்கான பணிகள் எப்போது தொடங்கும் என்று அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை. இருப்பினும் அங்குள்ள வீடுகள் 2030ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிட் பாத்தோக் கார் பயிற்சி நிலைய குத்தகைக் காலமும் அண்மையில் 2028 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

ஹோம்டீம் என்எஸ் வளாகத்துக்குப் பதிலாக உருவாக்கப்படும் புதிய மனமகிழ் மன்றம் 2031ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்