சிங்கப்பூரில் பல இன, சமயக் குழுக்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்த முற்பட்ட குற்றங்கள் தொடர்பில் உள்ளூர் இசைக் கலைஞர் சுபாஷ் நாயரின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை (பிப்ரவரி 5) அவர் ஆறு வாரச் சிறைத் தண்டனையை ஆற்றத் தொடங்கினார்.
தீர்ப்பைக் கேட்பதற்காக நீதிமன்றத்தில் காணப்பட்ட ஒரு சில ஆதரவாளர்களில் சுபாஷின் சகோதரி பிரீத்தி நாயரும் ஒருவர்.
2023 மார்ச்சில் நான்கு குற்றச்சாட்டுகளுக்கு சுபாஷ், 32, வழக்கு விசாரணை கோரியிருந்தார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே ஆண்டு மாவட்ட நீதிமன்றம் அவருக்குச் சிறைத் தண்டனை விதித்தது.
நீதிபதி ஹூ ஷியுவ் பெங், புதன்கிழமை சுபாஷின் மேல்முறையீட்டை நிராகரித்தார். சுபாஷ் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவர் தெரிந்தே வெறுப்புணர்வை ஏற்படுத்த முற்பட்டதாக மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக நீதிபதி ஹூ கூறினார்.
தண்டனையைப் பொறுத்தமட்டில், $5,600க்குமேல் அபராதம் விதிக்கப்படக்கூடாது என சுபாஷின் வாதத்தை ஏற்க நீதிபதி ஹூ மறுத்தார்.சுபாஷ் தெளிவாகச் சட்டத்தை மதிக்கவில்லை என்றார் அவர்.