அக்டோபர் 8 முதல் நவம்பர் 6ஆம் தேதி மாலை 4.30 மணி வரை, நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு பொதுமக்கள் தனிநபர்களின் பெயர்களைச் சமர்ப்பிக்கலாம்.
1990ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திட்டம், நாடாளுமன்றத்தில் பரந்த அளவிலான கருத்துகள் இடம்பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. மேலும் பரிந்துரைக்கப்படுபவர்கள் சிறந்த பொது சேவையைச் செய்திருக்க வேண்டும், சிங்கப்பூருக்குச் சிறப்பு சேர்த்திருக்க வேண்டும் அல்லது அந்தந்த துறையில் சீரிய பணியாற்றியிருக்க வேண்டும்.
இந்தத் துறைகள் கலை, விளையாட்டு, கலாசாரம், அறிவியல், வர்த்தகம், தொழில்துறை, சமூக சேவை, நிபுணத்துவ தொழில்கள், தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று அக்டோபர் 7ஆம் தேதி ஓர் அறிக்கையில் நாடாளுமன்ற அலுவலர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
ஒவ்வொரு பதவிக்காலத்திற்கும் அதிகபட்சமாக ஒன்பது நியமன எம்.பி.க்கள் இருக்கலாம், இது இரண்டரை ஆண்டுகள் நீடிக்கும். ஒருவர் சிங்கப்பூரராகவும், வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், தற்போதைய வாக்காளர் பதிவேட்டில் உள்ளவராகவும் இருந்தால், நியமன எம்.பி. ஆக பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதியுடையவர் ஆவார்.
வேட்பாளர்களின் பெயர்கள் நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் தலைமையிலான எட்டு பேர் கொண்ட சிறப்புத் தேர்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
அமைச்சர்கள் சான் சுன் சிங், டெஸ்மண்ட் லீ, இந்திராணி ராஜா, மூத்த துணை அமைச்சர்கள் ஸாக்கி முகம்மது, ஜனில் புதுச்சேரி, சிம் ஆன், செங்காங் குழுத் தொகுதி எம்.பி. லுயிஸ் சுவா ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ள மற்றவர்கள்.
பின்னர் அந்தக் குழு, யாரை நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பரிந்துரை செய்வது என்பது குறித்து விவாதித்து இறுதிப் பட்டியலை அதிபரிடம் சமர்ப்பிக்கும். பின்னர் அதிபரின் ஒப்புதலுக்குப் பிறகு அவர் நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர்களாகப் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள்.

