டாக்சி ஓட்டுநர்களுக்குச் சலுகை விலையில் பெட்ரோல், டீசல்

டாக்சி ஓட்டுநர்களுக்குச் சலுகை விலையில் பெட்ரோல், டீசல்

2 mins read
மத்திய கிழக்கு போர் பெட்ரோல் விலையைப் பெரிதும் பாதித்துள்ளது
ad8b543c-cf54-47c8-bf94-9dd42908d094
பிராடல் ரோட்டில் இயங்கும் கம்ஃபர்ட் டெல்குரோ வளாகத்தில் பெட்ரோல் நிரப்பும் டாக்சிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய கிழக்கில் தொடரும் போர், உலகெங்கும் விலைவாசியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதனால், சிங்கப்பூரில் பெட்ரோல் விலையும் அதிகரித்துள்ளது. போர் தொடங்கியதுமுதல் அதன் விலை கடந்த மூன்று நாள்களில் இரண்டுமுறை ஏற்றம் கண்டுள்ளது.

இங்கு டாக்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது ஓட்டுநர்களுக்கு உதவும் நோக்குடன், பெட்ரோல், டீசல் விலைகளில் சலுகைகள் வழங்கிவருகின்றன.

அந்த நிறுவனங்களின் வளாகங்களில் ஓட்டுநர்களுக்கென பெட்ரோல் நிரப்பும் சேவைகள் உள்ளன. அங்குப் பொது எரிபொருள் நிலையங்கள்போல விலை நிர்ணயிக்கப்படுவதில்லை.

பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையங்களைவிட டாக்சி நிறுவன எரிபொருள் நிலையங்களில் விலைகள் சற்று மாறுபட்டிருக்கும். ஓட்டுநர்கள் சலுகை விலையில் பெட்ரோல், டீசலை நிரப்பிக்கொள்ளலாம். தற்போதுள்ள நிலையில் 34 விழுக்காடுவரை ஓட்டுநர்களுக்கு விலைக்கழிவு வழங்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ நிலையங்கள் வியாழக்கிழமை (மார்ச் 5) 95-ஆக்டேன் வகை பெட்ரோலின் விலையை உயர்த்தி ஒரு லிட்டருக்கு $2.97 என விற்றன.

ஆயினும், கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சி சேவை நிறுவனம், அதே வகை பெட்ரோலை டாக்சி ஓட்டுநர்களுக்கும் தனியார் வாகன வாடகைதாரர்களுக்கும் $1.93 என்ற விலையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) வழங்கியது.

கம்ஃபர்ட் டெல்குரோ வியாழக்கிழமை (மார்ச் 4) 95-ஆக்டேன் வகை பெட்ரோலை $1.88 என்று ஓட்டுநர்களுக்கு விற்றிருந்தாலும் அதன் விலையை தற்போது ஐந்து காசு உயர்த்தியுள்ளது.

இருப்பினும், பொது எரிபொருள் நிலையங்களில் தரப்படும் சில்லறை விலையைவிட இந்தச் சலுகை விலை ஓட்டுநர்களுக்கு கட்டுப்படியாக இருக்கும் என அந்நிறுவனம் கருதுகிறது.

தேசிய டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் (NTA) பரிந்துரையுடன் இந்தச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

போர் தொடங்கிய பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து அனைத்து வகை பெட்ரோல்களின் சில்லறை விலை ஒன்பது காசு ஏற்றம் கண்டுள்ளது. இந்நிலை தொடரும் என்றே பலரும் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்