சிங்கப்பூர்வாசிகள் இப்போது நீண்டகாலப் பராமரிப்புச் சேவைகளுக்கு 80 விழுக்காடு வரை மானியம் பெறலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 57 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 95 விழுக்காடு வரை மானியம் பெறத் தகுதிபெறுவர்.
இப்புதிய மேம்பாடுகள் புதன்கிழமை (ஜூலை 1) நடைமுறைக்கு வந்தன.
மாதாந்தர தனிநபர் குடும்ப வருமான வரம்பு $4,800ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு அது $3,600 ஆக இருந்தது. இதன்மூலம், 10ல் ஏழு குடும்பங்கள் மானியங்களுக்குத் தகுதிபெறுகின்றன.
அத்துடன், அதிகபட்ச மானியத்துக்கான வரம்பும் $900லிருந்து $1,500 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாட்பட்ட நோயாளிகளுக்கான பராமரிப்பு, தாதிமை இல்லம், தாதிமை இல்ல ஓய்வுக்காலப் பராமரிப்பு, மனநல மறுவாழ்வு இல்லம், மனநலப் பாதுகாப்பு இல்லம் ஆகியவை நீண்டகாலப் பராமரிப்புச் சேவைகளின்கீழ் அடங்கும்.
இந்தச் சேவைகளை அனைவரும் அணுக முடியும் என்பதை உறுதிசெய்யவே இந்த மேம்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கம் வழங்கும் நீண்டகாலப் பராமரிப்புச் சேவைகளைப் பெறும் சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் மானியங்களுக்குத் தகுதிபெறுவர்.
நிரந்தரவாசிகள் 50 விழுக்காடு வரை மானியம் பெறலாம்.
நீண்டகாலப் பராமரிப்புச் சேவைகள் தேவைப்படுவோர் மருத்துவமனை, பலதுறை மருந்தகம் அல்லது ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பை நாடலாம்.
கூடுதல் விவரங்களைச் சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

