தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்ஆர்டி தண்டவாளப் பழுதுநீக்கும் பணியில் கணிசமான முன்னேற்றம்

2 mins read
1588f51c-b1b9-4ce7-ac48-501100b45fc9
ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட புதிய தண்டவாளப் பகுதியைப் பொருத்த நவீனக் கருவிகளைப் பொறியாளர்கள் பயன்படுத்தினர். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்/ஃபேஸ்புக்

பழுதடைந்த ரயில் தண்டவாளங்களைச் சரிசெய்வதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, கிளமெண்டி எம்ஆர்டி ரயில் நிலையத்திற்கும் டோவர் எம்ஆர்டி ரயில் நிலையத்திற்கும் இடையிலான தண்டவாளப் பாதையில் நடைபெற்ற பழுதுநீக்கும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆணையம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளது.

சனிக்கிழமை (செப்டம்பர் 28) அது வெளியிட்ட பதிவில், “எங்களது குழுவினர் இரவு, பகலாக பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதில், கனரக பாகங்களின் விநியோகம் நிறைவுபெற்றது உள்ளிட்ட சில முன்னேற்றங்கள் காணப்பட்டு உள்ளன,” என்று தெரிவித்து உள்ளது.

மேற்குத் தட எம்ஆர்டியின் கிளமெண்டி நிலையத்திற்கும் டோவர் நிலையத்திற்கும் இடைப்பட்ட 1.6 கிலோமீட்டர் தண்டவாளப் பாதையில் 34 இடங்களில் சிறு விரிசல்களும் சிதறல்களும் ஏற்பட்டன.

பாதுகாப்பான ரயில் பயணத்திற்காக, சேதமுற்ற அந்தப் பகுதிகள் நீக்கப்பட்டு புதிய தண்டவாளப் பகுதிகள் பொருத்தப்படுகின்றன.

அந்தப் புதிய தண்டவாளப் பகுதி ஒவ்வொன்றும் ஒரு டன்னுக்கும் மேற்பட்ட எடை கொண்டவை.

தண்டவாளங்கள் உடைந்துள்ளதால் அவற்றை பொறியியல் சாதனங்களுடனான வாகனங்களில் தண்டவாளம் வழியாக எடுத்துச் செல்ல இயலவில்லை.

அதற்குப் பதில் ‘ஜிக்’ (jig) எனப்படும் உருளைப் பொறிகள் மூலம் புதிய தண்டவாளங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்று, அகற்றப்பட்ட பழுதான தண்டவாளத்திற்குப் பதில் அவை பொருத்தப்படுகின்றன.

பருவநிலை சாதகமாகத் தொடர்ந்தால், பாதிக்கப்பட்ட தூரம் முழுவதும் பழுதான ரயில் தண்டவாளத்தை புதிதாக மாற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 25ஆம் தேதி, உலு பாண்டான் பணிமனையை நோக்கிச் சென்ற பழுதடைந்த ரயில் ஒன்று தண்டவாளத்தையும் அதன் பக்கவாட்டுச் சாதனங்களையும் சேதப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஜூரோங் ஈஸ்ட்டுக்கும் போன விஸ்தாவுக்கும் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வரை அந்தத் தடத்தில் போக்குவரத்து மீளவில்லை.

ரயில் போக்குவரத்துத் தடங்கல் காரணமாக செப்டம்பர் 25ஆம் தேதி 358,000 பயணிகளும் அதற்கு மறுநாள் 516,000 பயணிகளும் செப்டம்பர் 27ஆம் தேதி 500,000 பயணிகளும் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்