வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, நான்கு முதல் ஏழு வயதுடைய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தி, நூல்கள் மீது விருப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற சிண்டாவின் 20 வார ‘புக் விசார்ட்ஸ்’ திட்டத்தை மாணவர்கள் 69 பேர் நிறைவுசெய்துள்ளனர்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) சார்பில் நடைபெற்ற இத்திட்டத்தில் பங்கேற்று, முழுமையாக நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் விழா ஜனவரி 25ஆம் தேதி ஹுவா சோங் கல்வி நிலைய அரங்கில் நடைபெற்றது.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் (ECDA) ஆரம்பகாலக் கற்றலைப் பேணி வளர்க்கும் கட்டமைப்பின்கீழ் (NEL Framework) நூல் வாசிப்புடன், விளையாட்டுகள், நடைமுறைச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல் உள்ளிட்டவை இந்த 20 வாரங்களில் நடைபெற்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தொடங்கிய இந்தத் திட்டம், நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீடித்தது. ஒரு மாணவருக்கு ஒரு வழிகாட்டி எனும் அடிப்படையில் இணையம் வழி இவ்வகுப்புகள் நடைபெற்றன.
குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களைப் பார்த்தல், நூல் வாசிப்பு, கற்பனை வளத்தின் அழகியலை அனுபவித்தல் போன்ற வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் நடைபெற்றது.
“வாசிப்பின் முக்கியத்துவத்தை சிண்டா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது,” என்று சொன்ன அதன் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், “இந்தத் திட்டம் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணம் தொண்டூழியர்கள்தான்,” என்றார்.
“ஒரு சில வாரங்கள் தொடர்ந்து ஒரு திட்டத்தில் பங்கெடுப்பதே சிரமம். தொடர்ந்து 20 வாரங்கள் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது,” என்றார் அவர்.
மேலும், “தடையின்றி வாசிப்பதில் சிரமம் இருந்தால், மாணவர்களிடம் சரியான சொற்களை பயன்படுத்துகிறோமா என்பது போன்ற கேள்விகள் ஏற்படுத்துவதுடன் தன்னம்பிக்கையை அது குறைக்கவும் வாய்ப்புண்டு. அதனால் சமூகத் தொடர்பும் குறையும். இவற்றைச் சரிசெய்வதற்கான முதற்படி, தடையற்ற வாசிப்பு. மேலும், நூல்கள் மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டும். அதற்கான பங்களிப்பாக இந்தத் திட்டம் செயல்பட்டது மகிழ்ச்சி,” என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இத்திட்டத்தில் பெரும்பங்காற்றிய ஹுவா சோங் கல்வி நிலைய மாணவர்களின் அர்ப்பணிப்பையும் திரு அன்பரசு பாராட்டினார்.
தனது உறவினர்களின் சிறு குழந்தைகளிடம் எப்போதும் பழகுவது பிடிக்கும் என்பதால், தன்னிடம் வாசித்தலைக் கற்ற மாணவரை நிர்வகிப்பது கடினமாக இல்லையெனச் சொன்னார் இதில் பங்களித்த தொண்டூழியரும் வங்கி ஊழியருமான அரவிந்த் ரவீந்திரன்.
“தற்போதைய கல்வித் திட்டம் எவ்வாறு இயங்குகிறது, இப்போதுள்ள மாணவர்களின் மனநிலை உள்ளிட்ட பலவற்றை நானும் கற்க இந்தத் திட்டம் உதவியது,” என்றார் அவர். இதன் மூலம் தனக்கு ஆறு வயதில் ஒரு நண்பன் கிடைத்தது மகிழ்ச்சி என்றார் அவர்.
“முதல் அமர்வில் என்னுடன் பேசவே தயங்கிய எனது மாணவி, இப்போது கலகலப்பாக உரையாடும் அளவுக்கு எங்களுக்குள் பிணைப்பு ஏற்பட்டுள்ளது. இது நெகிழ்ச்சியான அனுபவம்,” என்றார் இதில் பங்களித்த தொண்டூழியரும் குழந்தைகள் நூல் ஆசிரியருமான அபர்ணா கௌஷிக்.
“திரையின்முன் நேரம் செலவிடுவதைக் குறைத்து, மாணவர்களை நூல் வாசிப்பிலும், கைவினை, செயல்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதும் அவர்களின் சிந்தனைத் திறனை அதிகரிக்க வகை செய்யும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதை நோக்கிய பயணத்தில் நானும் சிறு பங்காற்றியுள்ளேன் என்பதில் பெருமை,” என்றும் அவர் தெரிவித்தார்.
“இத்திட்டத்தில் பங்கேற்றபின் விளம்பரப் பலகைகள், உணவுப் பட்டியல், பொருள்களின் கையேடுகள் என அனைத்தையும் என் மகள் தடையின்றிப் படிக்கிறாள். இத்தகைய ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்திய இத்திட்டம் வரவேற்கத்தக்கது,” என்றார் இதில் பங்கேற்ற மாணவியின் தாயார் துர்கா.
இதில் பங்கேற்ற மாணவர்கள் ஆதவன் அலங்காரன், அனில் ஹீரன் விக்னேஸ்வரன், ஆர்யா ஹீரன் விக்னேஸ்வரன் ஆகியோர் குழுவாகச் சுற்றுலா சென்றதும், அது பற்றிய ‘ஸ்கிராப்புக்’ செய்ததும் நல்ல அனுபவம் என்றனர்.
தனக்கு இந்திய நண்பர்கள் அதிகம் இல்லை என்றும் இந்தத் திட்டம் இந்தியக் கலாசாரம் குறித்துத் தெரிந்துகொள்ள உதவியதாகவும் சொன்னார் வாசிப்பில் உதவிய ஹுவா சோங் கல்வி நிலைய மாணவர் நைஜெல் சுவா (Nigel Chua).
“சிறு வயது மாணவர்களுடன் பழகியது பொறுமையைக் கற்றுத்தந்தது,” என்றார் மற்றொரு மாணவரான டான் செரி காய்.