பொழுதுபோக்கு நிலையங்களில் திடீர் சோதனை; வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 17 பேர் கைது

2 mins read
4f849318-6f5f-41f3-892c-27a81433c3ec
கைது செய்யப்பட்ட ஐந்து சிங்கப்பூரர்களில் முன்னாள், இந்நாள் பொழுதுபோக்கு நிலையங்களின் உரிமையாளர்களும் அடங்குவர். - படம்: மனிதவள அமைச்சு

சிங்கப்பூரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 17 பேர் கைது செய்யப்பட்டதாக மனிதவள அமைச்சு செப்டம்பர் 4ஆம் தேதி தெரிவித்தது.

செப்டம்பர் 2ஆம் தேதி பொழுதுபோக்கு நிலையங்களில் அந்தச் சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் சிங்கப்பூரர்கள். அவர்கள் 31 முதல் 37 வயது வரையிலானவர்கள். இவர்கள், தற்போதுள்ள பொழுதுபோக்கு நிலையங்கள் அல்லது முன்பு செயல்பட்ட பொழுதுபோக்கு நிலையங்களின் உரிமையாளர்கள் எனச் சொல்லப்படுகிறது.

இங்குள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் 34 வயது சிங்கப்பூரராகிய பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் ஆறு பேரும், செயல்படாத பொது பொழுதுபோக்கு நிலையங்களுக்கு வெளிநாட்டுக் கலைஞர்களை வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்படும் கும்பலின் ஒரு பகுதியாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றனர் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

அப்படி வேலைக்கு அமர்த்தப்பட்ட வெளிநாட்டுக் கலைஞர்கள் பின்னர் பிற பொதுப் பொழுதுபோக்கு நிலையங்களில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

எஞ்சிய 11 பேர் வெளிநாட்டைச் சேர்ந்த வொர்க் பர்மிட் வைத்துள்ள பெண்கள். இவர்கள், வொர்க் பர்மிட்டுக்கான விண்ணப்பங்களில் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளதாக நம்பப்படுகிறது. இவர்களுடைய வொர்க் பர்மிட்டுகள் ரத்து செய்யப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

ஏழு பொழுதுபோக்கு நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட மேலும் 42 வெளிநாட்டவர்களின் வொர்க் பர்மிட்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்தது.

இந்த நிலையில் முதலாளிகள், தகுதியுள்ள வொர்க் பர்மிட்டுகளைப் பெற்று வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று நினைவூட்டப்பட்டுள்ளது. முதலாளிகளும் விண்ணப்பதாரர்களும் வொர்க் பர்மிட் விண்ணப்பங்களில் துல்லியமான, முழுமையான, உண்மையான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்