தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 11 பேர் கைது

2 mins read
9dcda58c-4d2f-4a90-ba32-e16a8729f8ad
காவல்துறையினர் டிசம்பர் 20, 21 என இரு நாள்களில் விரைவுச்சாலைகளில் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 10 பேர் மாண்டனர்.

அதனால், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்கும் நோக்கில் காவல்துறையினர் டிசம்பர் 20, 21 என இரு நாள்களில் விரைவுச்சாலைகளில் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக மத்திய விரைவுச்சாலையில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். டிசம்பர் 21ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் அச்சோதனை நடந்தது.

அங் மோ கியோ நோக்கிச் செல்லும் ஜாலான் பஹாகியா வெளிவழிக்கு முன் நான்கு தடங்கள் கொண்ட விரைவுச் சாலையில் இடது பக்கம் உள்ள இரண்டு தடங்களை போக்குவரத்து காவல்துறையினர் மூடினர்.

அமலாக்க நடவடிக்கை அதிகாலை 3.45 மணி முதல் காலை 5.20 மணி வரை நடந்தது. அதில் 74 வாகனமோட்டிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களின் வயது 31க்கும் 58க்கும் இடையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவுச்சாலையில் தடுப்பு ஏற்படுத்தி சோதனையிடுவது இதுவே முதல்முறை என்று காவல்துறை கூறியது.

திடீர் சோதனை பொதுமக்களுக்கு சிறு இடையூறை ஏற்படுத்தியது, இருந்தாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க உதவும் என்று காவல்துறை தெரிவித்தது.

இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவங்கள் 142 ஆக பதிவாகியுள்ளது.

மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு 2,000 வெள்ளி முதல் 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்